சிறிலங்காவுக்கு வடக்கே வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் ஓமந்தையில் அமைந்திருந்த இராணுவத்தின் சோதனைச் சாவடி சனிக்கிழமை முதல் நீக்கப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சிறிலங்காவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முக்கிய புள்ளியான ஓமந்தையில் பயணிகளின் வசதி கருதியே இம்முடிவு எடுக்கப் பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் இறுதி யுத்தம் நடந்த 2009 ஆம் ஆண்டு வரை இராணுவத்தின் பிரதான சோதனைச் சாவடியாக ஓமந்தை செயற்பட்டு வந்ததுடன் இதைத் தாண்டியே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்துக்குள் நுழைய முடியும் என்ற சூழ்நிலையும் இருந்து வந்தது. எவ்வளவு பெரிய கனரக வாகனமாக இருந்தாலும் அவை நிறுத்தப் பட்டு அனைத்துப் பொருளும் இறக்கி சோதிக்கப் பட்டே அனுப்பப் பட்டு வந்ததால் அச்சமயத்தில் இந்த சோதனைச் சாவடி அருகே மிகப் பெரிய வாகன நெருக்கடி நிலவுவதும் இதனால் பிரயாண நேரம் பன்மடங்கு அதிகரித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிந்த பின்னர் நெருக்கடி சற்றுத் தளர்த்தப் பட்டு அடையாள அட்டை மாத்திரமே பரிசோதிக்கப் பட்டு வந்த நிலையில் நேற்றைய தினத்துடன் இச்சோதனைச் சாவடி முற்றாக மூடப் பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் இடம்பெறும் வீதம் சடுதியாக அதிகரித்து இருப்பதாகக் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2 1/2 மாதங்களில் வீதி விபத்துக்களில் சிக்கி மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4850 பேர் விபத்துக்களால் எலும்பு முறிவடைந்து வைத்திய சாலைகளில் இருப்பதாகவும் 700 பேருக்குத் தலையில் அடிபட்டு சற்று மோசமான நிலையில் இருப்பதாகவும் யாழ் போதனா வைத்திய சாலையினால் கணிப்பிடப் பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 124 பேர் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மேலும் கொல்லப் பட்டவர்களில் பலர் போக்குவரத்து விதிகளை நன்கு தெரிந்திருந்தும் அலட்சியப் போக்குக் காரணமாக விபத்தில் சிக்கியவர்கள் என்றும் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment