August 25, 2015

ஆணைக்குழு நல்ல முடிவினை வழங்கவேண்டும்!3 மகன்களை பறிகொடுத்த தாய்(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டவர்களினதும் காணாமல் போனவர்களினதும் குடும்பங்கள் தினமும் வேதனையுடனும் கண்ணீருடனுமே வாழ்ந்து வருகின்றன.
அவர்களுக்கு காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நல்ல முடிவு வரும் என்றே வந்துள்ளதாக மூன்று மகன்மார்களை இழந்த மட்டக்களப்பு வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மவாட்டத்தில காணமல் போனோர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆனைக்குழு 3 ஆம் கட்டமாக தமது விசாரணைகளை மேற்கொண்டு மூன்றாவது தினமான இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடாத்தியது.
நேற்று திங்கள் கிழமை (24) காலை 9 மணி தொடக்கம் 05 மணி வரை நடைபெற்ற காணமல் போனோர்களை கண்டறியும் ஜனாபதி ஆணைக்குழு அமர்வில் சுமார் 175 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இதன்போது கோறளைப் பற்று வடக்கு வாகரை. கோறளைப்பற்று மேற்கு. கோறளைப்பற்று தெற்கு கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று என 5 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 255 பேருக்கு இன்றைய அமர்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள1081 முறைப்பாடுகளில் ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை மேற்கொணடு வருகிறது.நாளை செவ்வாய் கிழமையும் (25) வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சாட்சி விசாரணைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர்,
நான் புதுக்குடியிருப்பு, வாழைச்சேனையை சேர்ந்தவர்.என்ற மூன்று மகன்கள் இல்லாமல் போய்விட்டனர். ஒரு மகன் வாகரை கண்டலடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தவர் 1994ம் ஆண்டு காணாமல் போனார். யார் கடத்திக்கொண்டு சென்றார்கள் என்பது தெரியாது.
அக்காலப்பகுதியில் இராணுவத்தினரும் இருந்தார்கள் விடுதலைப் புலிகளும் இருந்தார்கள் யார் கொண்டு போனார்கள் என்று தெரியாது. இதுவரையில் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. மற்றைய மகன் கண்டலடி தரவைப்பகுதியில் வயல் வேலைசெய்து கொண்டிருந்த போது எனது மற்றைய மகன் காணாமல் போனார்.
அவருக்கு இதுவரையில் என்ன நடந்தது என்பது கூட தெரியாத நிலையே இருக்கின்றது. இதுவரையில் நான் பொலிஸ் நிலையத்திலும் முறையிடவில்லை. மரணச் சான்றிதழும் பெறவில்லை. எனது மூன்றாவது மகன் 2006ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரூடியோவில் வேலைசெய்து விட்டு வரும்போது இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நான் எனது மூன்று மகன்களை இழந்து நிற்கின்றேன். நான் கண்ணீரோடும் துன்பத்தோடுமே எனது காலத்தினை கழித்து வருகின்றேன். எனக்கு ஒரு நல்ல முடிவினை இந்த ஆணைக்குழு பெற்றுக்கொடுக்க வேண்டும்.இங்கு வந்துள்ளவர்கள் பலர் மகனை கணவனை தொலைத்தவர்களும் கடத்தப்பட்டுள்ளவர்களும் வந்துள்ளார்கள். அவர்களுக்கு நல்லமுடிவினை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
என்னைப்போல் எத்தனை தாய்மார்கள் உள்ளார்கள் அவர்களுக்கு இந்த ஆணைக்குழு சிறந்த தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என நம்பியே வந்துள்ளேன்.
நான் மூன்று பேரை இழந்துள்ளேன்.நான் மட்டும் இழக்கவில்லை. இன்று எத்தனையோ பேர் இங்கு வந்துள்ளார்கள்.கண்ணீரோடும் துன்பத்தோடும் உள்ளார்கள்.
கடத்திச் செல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வேதனையுடனும் கண்ணீருடனும் வாழ்கின்றனர்.

No comments:

Post a Comment