யாழ்ப்பாணம் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசத்தில் சில பிரதேசங்கள் மக்கள் மீள் குடியேறுவதற்கு நாளை அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மீள் குடியேற்ற அமைச்சு சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் வலி.வடக்கில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி இருந்தது.
அதனடிப்படையில் நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலளார்கள் யாழில் விடுவிக்கப்படாத பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
வசாவிளான் தோலகட்டி பிரதேசம் ஏற்கனவே விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இராணுவத்தினர் முள்வேலி அடைத்து அப்பிரதேசத்தில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கவில்லை. அந்தப் பகுதி விடுவிக்கப்படும் என எதிர்பார்கின்றோம்.
அதேபோன்று பலாலியில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் ஆலடி சந்தியில் இருந்து பலாலி பெரும் பிரிவுக்கு போகும் பாதை இராணுவத்தினர் முள்வேலி போட்டு மூடியுள்ளார்கள். அந்தப் பாதையும் அந்த மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் வறுத்தலைவிளான் பகுதியில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளது. அந்த முகாம் அகற்றப்பட்டால் 46 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்.
வீமன்காமம், தையிட்டி மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் சில விடுவிக்கப்படாத பிரதேசங்கள் உள்ளன. அவையும் விடுவிக்கபப்டும் என எதிர்பார்க்கின்றோம். என்றார்.
No comments:
Post a Comment