July 2, 2015

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வவுனியாவில் துண்டு பிரசுர போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வவுனியாவில் நாளை (03.07) 9.30 மணியளவில் துண்டு பிரசுர விநியோக போராட்டம் இடம்பெறவுள்ளதாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் ஒன்றுகூடி துண்டு பிரசுரங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நெடுந்துயர் சுமந்த தமிழர் எம் வாழ்வில் இது வரை மீட்சி கிட்டாது மீளத்துடிக்கும், நமக்காய் பாடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் எம் பிள்ளைகளின் விடுதலைக்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.
சுமார் 20 வருட காலம் தொடக்கம் இது வரை தண்டனை அனுபவித்தும் வழக்கு விசாரணைகள் முடிவின்றியும் நீதித்துறையின் பாராபட்சத்தினாலும், பிள்ளைகளையும் தாய் தந்தையரையும் சிறையில் தவிக்க விட்டு நாம் இங்கு வலியினை சுமந்து வேதனையுடன் வாழ்கின்றோம்.
இதுவரை காலமும் ஆட்சி பீடம் ஏறிய அரசுகளிடம் எல்லாம் எம் பிள்ளைகளின் விடுதலைக்காக கையேந்தி நின்றோம்.  தங்களின் நலனுக்காக அவ்வப்போது வாக்குறுதிகளை வழங்கி இன்று வரை ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.  இவ்வாறு இருக்க புதிய ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்பி தமிழினத்தின் அபிலாசைகளை வெல்லவே தமிழர்களாகிய நாம் இப்புதிய அரசினை வெற்றி பெற வைத்தோம்.  ஆட்சிபீடம் ஏறிய ஆரம்ப காலங்களில் எம் உறவுகளை எம்முடன் மீளிணைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் காலம் செல்லச் செல்ல மாற்றம் பெற்று எம் உறவுகளின் விடுதலையே மறுக்கப்படுகின்றது.
குறித்த இத்தொகையினர் மாத்திரமே இவ்வாறு அரசினால் தங்களின் அரசியலுக்காக மிக மோசமான செயல் புரிந்தோர் என குற்றம் சுமத்தப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர்.  அதன் உண்மைத் தன்மை எம் அனைவருக்கும் தெரியும். இன ஐக்கியம், நல்லிணக்கம், புரிந்துணர்வு என கூறிக்கொள்ளும் அரசாங்கமானது இவைகளைக் காட்ட வேண்டிய செயல்களில் காட்டாது வெறுமனே இதைப் பற்றி பேசிப்பேசி எம்மை ஏமாற்றுகின்றது.
இதுவரை அனைவரையும் நம்பி நம்பி நாம் ஏமாந்து போயுள்ளோம்.  விரக்தியடைந்த நாமே எம் பிள்ளைகளின் விடுதலை வேண்டி நேரடியாக உங்கள் அனைவரிடமும் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
காணாமல் போனோர், காணி மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கு வெகுஜன போராட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்ததைப் போன்று அண்மையில் புங்குடுதீவு மாணவியின் விடயத்தில் நீங்கள் நல்கிய பூரண ஒத்துழைப்பைப் போன்று எம் பிள்ளைகளின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment