ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மாபெரும் வெற்றிக்கு தமிழ் மக்களே காரணமாக இருந்தார்கள். அதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வது தமிழ் மக்களின் கடப்பாடாகும்.
எமது இலட்சியத்தை வீணடிக்காமல் எல்லோ ரும் ஒன்றிணைந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதன் மூலமே அரசாங்கத்தையும் சர்வதேசத்தையும் நாம் விழிப்படையச் செய்யலாம். அதுமாத்திரமன்றி, நாம் இந்த நாட்டின் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும். அதற்கான
சக்தியை வழங்குவது தமிழ் மக்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. வெறுமனே உதிரிக் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ் மக்களின் இலட்சியத்தை சிதறடிக்க வேண்டாமென நான் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று திருகோணமலையில் வைத்து கோரிக்கை விடுத்தார்.
சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிக்கும் வகையில் நேற்றைய தினம் அங்கு விஜயம் செய்திருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அங்கு திரண்டிருந்த கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
விடுவிக்கப்பட்ட சம்பூரை போல மிக விரைவில் வலிகாமமும் அந்த மக்களுக்காக விடுவிக்கப்படும். கடந்த வௌ்ளிக்கிழமை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய சம்பூர் மக்களுக்கு சொந்தமான 818 ஏக்கர் நிலமும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டது. சம்பூர் மக்களின் நீண்ட கால போராட்டமே அந்த மக்களுடைய மண் விடுவிப்புக்கான மூலக்காரணமாக இருந்திருக்கின்றது.
கடந்த 9 வருடகாலமாக எதுவிதமான அடிப்படை வசதிகளுமின்றி இம்மக்கள் முகாம்களில் வாழ்ந்தார்கள். கடந்த 25 வருடங்களாக வலிகாமம் மக்களும் இது போன்ற கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களுக்கான சொந்த நிலங்களை மிக விரைவில் விடுவித்துத்தர நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். சுமார் 1000 ஏக்கர் நிலம் வலிகாமத்தில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 5,000 ஏக்கர்கள் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள கடற்படை முகாம் அமைந்திருக்கும் 237 ஏக்கர் நிலமும் அந்த மக்களுக்காக விடுவிக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சம்பூர் மக்களுக்காக விடுவிக்கப்பட நிலத்தின் மீது யாரும் உரிமை பாராட்டவோ, தடை விதிக்கவோ முடியாது. இன்றிலிருந்து சம்பூர் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளிலேயே குடியேறலாம். தேர்தல் முடிந்தவுடன் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விடயங்களுக்கும் கிழக்கு மாகாணசபை உதவ வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment