July 18, 2015

தூக்கிவீசப்பட்ட மைத்திரி உள்ளே வந்தார் மகிந்த!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைகழுவிட்டு மஹிந்தவின் முழுமையான தலைமைத்துவத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமது தேர்தல் பிரசாரத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது
.
தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற மேடையில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில், கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மஹிந்தவின் புகைப்படம் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவரும், சு.கவின் சிரேஷ்ட உப தலைவருமான நிமல் சிறிபாலடி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுஸில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்தன ஆகியோர்கூட சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. முழுமையாக மஹிந்தவின் பெருமையை மட்டுமே கூறியதை அவதானிக்க முடிந்தது.
மேலும், கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாகச் சாடி உரையாற்றினர்.
பிரதான மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இரு பெரிய பதாகைகளிலும் மஹிந்தவின் படம் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தது. ஆதரவாளர்களும் மஹிந்தவின் புகைப்படத்தை மட்டுமே கையில் ஏந்தியிருந்தனர்.
‘தேசத்திற்கு உயிர் கொடும்போம், புதிதாக ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆரம்பிப்போம் என்பதனூடாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரியைப் புறக்கணித்து, புதிய பயணத்தை ஐ.ம.சு.மு. முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைத்துவம் தொடர்பான சர்ச்சை தற்போது சு.க. மற்றும் ஐ.ம.சு.முன்னணியில் எழுந்துள்ளநிலையில், நேற்றைய கூட்டமானது சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரியை புறக்கணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும், இதற்கு முன்னர் இருந்த சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரியின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த பதாகை நீக்கப்பட்டு, வெற்றிலைச் சின்னம் மட்டும் பொறிகப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment