July 17, 2015

சிறீதரனுக்கு இதைவிடவும் வேறு என்ன ஆதாரம் வேண்டுமாம்?

சிறீதரனின் வேசத்தை களைத்து முகத்திரையை கிழிக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு’ உறுப்பினர்களின் வாக்குமூலம் இதோ… !
விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள்
முள்ளிவாய்க்காலில் சயனைட் உட்கொண்டு இறந்து விட்டதாகவும், புலம்பெயர் நாடுகளில் தப்பிப்பிழைத்திருப்பவர்கள் ‘போலிப்புலிகள்’ என்றும், உள்ளுரில் ஜனநாயக போராளிகள் என்று கூறுபவர்கள் ‘அரச முகவர்கள்’ என்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வவுனியா ‘வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் 06.07.2015 அன்று நடைபெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெளியேயும் சூனியப்பகுதிகளுக்குள்ளேயும் கைதாகி, தடுப்புக்காவல்களிலும் – சிறைக்கூடங்களிலும் சித்திரவதைகளை அனுபவித்துவரும் அத்தனை போராளிகளும்,
2009ம் வருடம் நடைபெற்ற யுத்தத்தின்போது காயமுற்று இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு தத்தமது குடும்பங்களுடன் இணைந்துள்ள 14,000க்கும் அதிகமான போராளிகளும்,
நாட்டில் உயிர் வாழ்வதற்கு உத்தரவாதமற்ற – பாதுகாப்பற்ற சூழ்நிலைகளினால் தமது குடும்பப்பிணைப்பை கந்தறுத்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கும் அத்தனை போராளிகளும், ‘சயனைட்’ உட்கொண்டு தம்மை ‘உண்மையான போராளிகளாக’ நிரூபித்துக்காட்டியிருக்க வேண்டும்! என்ற கருத்தை பலமாக தொனிக்கும் சிறீதரனின் அயோக்கியத்தனமான பேச்சு தொடர்பாக,
அவரிடம் கேள்வி எழுப்பும் முன்னாள் போராளிகள், புலம்பெயர்ந்து வாழும் உறவுகள், ஊடகங்கள், போரால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம்,
‘முடிந்தால் வொய்ஸ் ரெக்கோர்ட் ஆதாரத்தைக் காட்டுங்கள். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் வாக்குமூலத்தைத் தாருங்கள்’ என்று சவால் விட்டு வருகின்றார். இன்னும் ஒருபடி மேலேபோய் தன்னுடைய தேர்தல் காலத்தொண்டர்களிடம், ‘தான் அப்படிப் பேசியிருந்தால் அரசியலிருந்து விலகி விடத்தயாராக இருப்பதாகவும்’ சென்டிமென்ட் கதையளந்து வருவதாக அறிய முடிகின்றது.
06.07.2015 அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியை (ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்) சேர்ந்தவர்களிடம் சிறீதரனின் அயோக்கியத்தனமான பேச்சு தொடர்பில் வாக்குமூலம் பெற்று, அதனை நாம் இங்கு பதிவேற்றுவோமாக இருந்தால் என்ன நடக்கும்?
‘ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் மாற்றுக்குழுக்கள் – ஆயுதக்குழுக்கள். அவர்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள், அரசாங்கத்தோடும் இராணுவ புலனாய்வாளர்களோடும் சேர்ந்து தொழில்படுபவர்கள்’ என்றெல்லாம், இப்போது அரைப்பதை விடவும் இன்னும் காரமாக மொத்த உலகத்தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைப்பார் சிறீதரன் என்பதை, நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்காது. (சிறீதரன் என்கிற தனிமனிதனைப்பற்றி பேசினால், அவர்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள். இராணுவத்தின் கைக்கூலிகள் என்பதைத்தான் இவ்விடத்தில் நீங்கள் மிகவும் உன்னிப்பாக கவனத்தில்கொள்ளுதல் வேண்டும்.)
இப்பவே அவர், ‘வரும் தேர்தலில் சிறீதரன் விருப்பு வாக்குகளை எடுத்து விடுவாரோ, சிறீதரன் வென்று விடுவாரோ என்று பயப்படுகின்ற கூட்டமைப்புக்குள் இருக்கின்ற தீயசக்திகளும், அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் சில சக்திகளும் இணைந்துதான் தனக்கு எதிராகச் செய்தியை வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் சளாப்பி வருகின்றார்.
‘உண்மையான போராளிகள் சயனைட் உட்கொண்டு இறந்திருக்க வேண்டும்!’ என்ற அவரது அயோக்கியத்தனமான பேச்சை மட்டும் முன்னிறுத்தி ஊடகங்கள் சிறீதரனிடம் கேள்வி எழுப்பினால், அவர் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல், பேட்டியை எங்கோ தொடங்கி நடுவில் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கிப்பேசி, அவர்களுக்கு வலிந்து துரோகிப்பட்டம் சூட்டி, பெரும் சிரமப்பட்டு தன்னைத் தியாகியாகக் காட்டி, இறுதியாக ஈ.பி.டி.பியில் கொண்டு போய் முடித்து வைக்கின்றார்.
ஆதலால் சிறீதரனுக்கு அவர் வழியிலேயே சென்று பதிலளிக்க கடைமைப்பட்டுள்ளோம். கொஞ்சம் ‘கிக்’காக இருக்கட்டுமே என்பதற்காக, 06.07.2015 அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி உறுப்பினர்களை தவிர்த்து, சிறீதரன் மத்தியகுழு உறுப்பினர் உறுப்புரிமை வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடமே, சிறீதரனின் அயோக்கியத்தனமான பேச்சு தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுள்ளோம். சிறீதரனின் ‘தமிழ் வீரச்சளாப்புதல்’ இனியும் சரிப்பட்டு வராது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சருமாகிய துரைராசசிங்கம், மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் உதவிபொருளாளரும், அக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தலைவரும், வடக்கு மாகாணசபையின் உப அவைத்தலைவருமாகிய அன்ரனி ஜெகநாதன் ஆகியோரின் வாக்குமூலத்தை (இது ட்ரெயிலர் தான்…) முதலில் சிறீதரனின் வேசத்தை களைப்பதற்காக வெளியிடுகின்றோம். கேளுங்கள்!
கிழக்கு மாகாண அமைச்சர் துரைராசசிங்கம்:
இவருடைய வாக்குமூலத்தை அவ்வளவு இலகுவில் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அப்படி வார்த்தைகளுக்குள் அடக்க முயற்சித்தால் அதன் உயிரோட்டத்தை அது கெடுத்துவிடும். அப்படியொரு ‘வொண்டர்புல்’ வாக்குமூலம்! அதனை நீங்களே அவரது குரல் வடிவத்தில் கேட்கும்போதுதான், சிறீதரனின் அயோக்கியத்தனமான பேச்சு அவரையும் அவரது கட்சியினரையும் எவ்வளவு பெரிய விபரீதத்துக்குள் தள்ளியுள்ளது எனும் உண்மைநிலைவரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
வடக்கு மாகாணசபையின் உப அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன்:
‘சிறீதரன் கருத்துக்கூற எழுந்த சமநேரத்தில் எனக்கு தவிர்க்க முடியாத தொலைபேசி அழைப்பொன்று வந்தமையினால் கூட்டத்திலிருந்து எழுந்து வெளியே சென்று உரையாடிவிட்டு மீண்டும் உள்ளே சென்றபோது கூட்டத்துக்குள்ளே பதற்றமான சூழல் காணப்பட்டது. என்ன நடந்தது? என்று சக உறுப்பினர்களிடம் வினவியபோது, விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு எதிராக சிறீதரன் பாதகமான கருத்தை கூறியதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். சிறீதரனின் கருத்தால் கூட்டத்துக்குள் பெரும் குழப்பமும் பிரச்சினையும் ஏற்பட்டிருந்தது.
சிறீதரனின் கருத்து தவறானது. இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களை இன்றைய காலச்சூழலில் சொல்வது பொருத்தமானதல்ல. உண்மையில் இந்தப்போராளிகள் எமது மண்ணின் விடுதலைக்காகப் போராடியவர்கள். தாங்களாக இயக்கத்தில் விரும்பி இணைந்து பல சமர்களைக்கண்டவர்கள். உடல் முழுவதும் அந்த சமர்களின் விழுப்புண்கள் இப்போதும் இருக்கின்றன.
நானும் எனது ஒரு மகனை இந்த மண்ணுக்காக கொடுத்தவன் என்ற உணர்வு ரீதியாக கூறுகின்றேன். இதுவரை காலமும் இந்தப்போராளிகள் மிகவும் மதிக்கப்பட்டு வந்தனர். இன்றுள்ள சூழலில் இந்தப்போராளிகள் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படாமலும், கௌரவமளிக்கப்படாமலும் நடத்தப்படுகின்றனர் என்பது மட்டும் உண்மை! தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்த காலத்திலே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் போராளிகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட்ட காலம் ஒன்று இருந்தது.
2009க்கு பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கேள்விகேட்க எவரும் இல்லை என்ற நமட்டுத் துணிச்சலில் தாங்கள் நினைத்தவாறு நடந்துகொள்ளுகின்றனர். என்னைப்பொறுத்தவரையிலே போராளிகள் மிகவும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். மக்களுக்காக அவர்கள் செய்த பணி, அவர்களுடைய விழுப்புண்கள் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடையமாகும். அந்தவகையிலே இந்தப்போராளிகளின் பக்கம் தான் என்றைக்கும் நான் நிற்பேன்.’ என்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
கவனியாதோர் கவனத்துக்கு:
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களில் எவரும், ‘தன்னை விடவும் புலிகளின் ஆதரவாளன்’ என்ற தோற்றப்பாட்டை எடுத்துவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்துவரும் சிறீதரன், மற்றவர்களை விடவும் புலிகள் இயக்கத்துடன் தனக்கே நெருங்கிய உறவும் – தொடர்பும் இருந்தது என்றும், இறுதி யுத்தத்தில் நடந்தவைகள் பற்றி தனக்கு நிறைய இரகசியங்கள் தெரியும் என்றும் சிறுபிள்ளைத்தனமாக காட்டமுனைந்து 06.07.2015 அன்றைய கூட்டத்தில் கூறியதைக்கூறியவாறு செய்தி வெளிவந்ததும், ‘தனக்குக் கிடைக்கக்கூடிய விருப்பு வாக்குகளைக்கண்டு அஞ்சுகின்றனர் என்றும், அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் தீயசக்திகள் என்றும்’ ஏதேதோ எல்லாம் பிதற்றுகின்றார்.
அவ்வாறாயின் சிறீதரன் (யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி) கூறுவதைப்போல நோக்கின், வாக்குமூலம் தந்துள்ள கிழக்கு மாகாண அமைச்சர் துரைராசசிங்கம் (திருகோணமலை தேர்தல் தொகுதி), அன்ரனி ஜெகநாதன் (வடமாகாணசபை உபதவிசாளர்- இவர் வன்னி தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவர்) ஆகியோர் எப்படி சிறீதரனின் விருப்பு வாக்குகளைக்கண்டு அஞ்சமுடியும்? எங்கேயோ லொஜிக் இடிக்கிறதே…!
மேலும் வாக்குமூலம் தந்துள்ள அவர்கள் அரச இராணுவ புலனாய்வு முகவர்களா? இது சிறீதரனுக்கே வெளிச்சம்…! இன்னும் ஆதாரம் தேவை என்றாலும் மேலதிக வாக்குமூலங்களை வெளியிடுவதற்கும் தயாராகவே உள்ளேன். எனது நோக்கம் சிறீதரனைத் தோற்கடிப்பதோ அல்லது வெல்லவைப்பதோ அல்ல. போராளிகளைக் கொச்சைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதும், ‘உண்மைக்குள் வாழ’ அவர் பழகவேண்டும் என்பதுமே. தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது மட்டுமே அவருக்குரிய ஒரே தெரிவாக இருக்க முடியும்.
-கவரிமான்-

No comments:

Post a Comment