மகிந்த ராஜபக்ச திருடன் என்றால், திருடனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஏன் அஞ்சுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
மகிந்த திருடன் என்றால், அப்படியான திருடனை தேர்தலில் தோற்கடித்து அரசியலில் இருந்து துடைத்தெறிய முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெறும் என்ற அச்சமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
நாராஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாவை நாட்டுக்கு இல்லாமல் செய்தவர்களுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டாம் எனக் கூறி எவரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதில்லை.
கடந்த ஜனவரி 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்தும், கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தும் விலகி சென்ற பின்னர், அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு பழிவாங்கல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு தலைமையேற்குமாறு மக்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதால், இந்த பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக் கூடும்.
சகல சவால்களையும் எதிர்கொள்ளும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு தலைமையேற்றுள்ளார்.
No comments:
Post a Comment