July 20, 2015

புலி முகச் சிலந்தி வலையில் சிக்கினார்களா புலிப் போராளிகள் !! வில்லங்கமான வித்தியாதரன்!

நூற்றுக்கு நூறு பொருத்தமாயிருக்கிறது ஊடகவியலாளர் ந.வித்தியாதரனுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் சிலந்தியாகும்.


ந.வித்தியாதரன் சிலந்தியாகவும் அவரால் பின்னப்பட்ட வலையில்
விழ்ந்தவர்களாக சில முன்னாள் தலைவர்களும் காணப்படுவதாக அர்த்தம் கொள்ளலாம். இந்தக் குழுவினர் பரப்புரைக்காக பெரிதாக செலவு செய்யத் தேவையில்லை ந. வித்தியாதரனை கூட்டத்தின் முன்னால் நிற்க வைத்து புன்னகைக்கச் செய்தால் போதும் வெற்றி நிச்சயம். " என் எழுத்தாயுதம்" எனும் அவரது நூலில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
தலைவர் பிரபாகரன் தொடங்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச வரை சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க தொட்டு இராணுவத் தளபதிகள் ஜெனரல் பலகல்ல, ஜெனரல் சாந்த கொட்டெ கொட உட்பட பல மூத்த இராணுவ அதிகாரிகள் வரை பலரையும் கவரும் முகபாவத்தையும், பேச்சு வன்மையையும் நான் ஓரளவு கொண்டிருந்தேன் என்பேன். முன்னால் இருப்பவரின் உள்ளக்கிடக்கையை ஊகித்து நாசூக்காக காய்நகர்த்தும் உளப்பாங்கே ஊடகத்துறையில் பல நெருக்கு வாரங்களை நான் தாண்டுவதற்கான வெற்றிப்படிக்கட்டுகளாக அமைந்திருந்தன என்பேன் (65-66)
முன்னால் அமைந்திருக்கும் அதிகாரவர்க்கத்தை அது இராணுவ உயரதிகாரியாக இருக்கலாம் புலிகளின் தலைவராக இருக்கலாம் அல்லது நாட்டின் தலைவராகக் கூட இருக்கலாம் எனது பேச்சு வன்மையால் வசீகரித்துச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்தது அந்த யுக்தி எனக்கு கை தந்தது என்றே சொல்வேன்( பக்கம் 65)
சம்பந்தன் ஐயாவுக்கு வயசாகிவிட்டது இதனால் வித்தியாதரனின் முகபாவத்தை கவனிக்கவும் அவரது பேச்சு வன்மையை கிரகிக்கவும் முடியவில்லை போல் இருக்கிறார். எனவே அவரது கவனத்தை ஈர்க்க சில முன்னாள் போராளிகளை பயன்படுத்தி இருக்கிறார் போலவும்.

அவரது நூலின் இன்னொரு பகுதியைப் பாருங்கள்.
ஓர் இழை கிடைத்ததால் அதை தேர் இழுக்கக்கூடிய வடமாக திரிக்கவும் வல்லமை பெற்ற சூரர்கள் நாங்கள் ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் எங்களுக்கு அந்த ஈர் முதலில் சிக்குவதுதான் முக்கியம் (பக்கம் 20)
கடைசியில் ஈராகவோ இளையாகவோ இந்தப் போராளிகளா கிடைத்தார்கள் ? சம்பந்தன் ஐயாவை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் என்னும் அவரது நிலைப்பாட்டை தர்க்க ரீதியாக தவறு என்று நிருபிக்கலாம் அதனை விடுத்து சம்பந்தன் ஐயா கடலைக் கடை நடத்தத்தான் லாயக்கானவர் என இவருடன் இருக்கும் முன்னாள் போராளிகள் குறிப்பிடுவது தவறு. அப்படியானால் அந்தக் கடையில் கச்சான் வறுக்கவா இடம் கேட்பீர்கள் என்று யாராவது திரும்பிக் கேட்கலாம்.
எப்போதும் தனிப்பட்ட ரீதியில் தலைவர் யாரையும் விமர்சிப்பதை ஏற்காதவர் ஒருவரது கொள்கை, அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்பது அவரது தீர்மானம். பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பாக தனிப்பட்ட ரீதியில் ஈழநாதம் பத்திரிகையில் விமர்சித்தமைக்காக அதை எழுதியவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் பொறுப்பாளர் அழகன் மூலம் எழுத்து மூலமான மன்னிப்பை கோரும் நடவடிக்கையை மேற்கொள்ளச் சொன்னவர் தலைவர் இது இந்த புதிய போராளிகளுக்குத் தெரிய நியாமில்லை. எனவே வித்தியாதரன் என்பவரே இந்த முன்னாள் போராளிகளை தவறாக வழி நடத்த வேண்டாம் .

பிரபாகரன் உங்களது புன்சிரிப்பில் மயங்கி விட்டார் என்பதும் தங்களது தவறான கணிப்பு . அவரைப் புரிதல் என்பது சயனைட் கட்டிய போராளிகளால் மட்டுமே முடியும். விதி விலக்கு பாலா அண்ணர் மட்டுமே. கிளிநொச்சியில் நடந்த பிரமாண்டமான ஊடகவியலாளர்கள் மாநாட்டுக்கு தங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பதை தங்களுடன் நிற்கும் போராளிகளுக்கு நிச்சயம் நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள். இன்னொரு விடயத்தை நாம் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுகின்றோம் பிரபாகரனை தலைவராக ஆத்மார்த்த ரீதியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் போராளிகள் அவரது இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்க மாட்டார்கள். அவரைப்போல ஆக வேறு எவராலும் முடியாது.
வேட்பு மனுத்தாக்குதலின் பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறிய கருத்துக்களை பொதுமக்கள் சிறுபிள்ளைத்தனமாகத்தான் பார்ப்பார்கள்.

  

No comments:

Post a Comment