July 14, 2015

இசைமாமேதை எம்.எஸ். விஸ்வநாதனை இழந்தோமே! தி.வேல்முருகன்1

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக கோலோச்சிய மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் 87 வயதில் நம்மை பிரிந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது..


கேரளாவில் இளம்பிராயத்தில் வறுமையில் வாடிய போதும் தணியா இசை ஆர்வம் கொண்டவராக இருந்தவர்.. ஜெனோவா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் கால் பதித்து 1,200 படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.வி. அவர்கள். 

தமிழ் சினிமாவின் உன்னதமான படங்களுக்கு இசை அமைத்து காலத்தால் அழியாப் புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் 4 தலைமுறைகளைக் கண்டவர்.. இன்றைய மூத்த இசை அமைப்பாளர்களுக்கும் குருவாக திகழ்ந்தவர். 

இசை அமைப்பாளராக மட்டுமின்றி பாடகராக, நடிகராகவும் தமது பன்முகத்தை வெளிப்படுத்தியவர் எம்.எஸ்.வி. அவர்கள்.

இன்றளவும் பள்ளிக்கூடங்களில் இசைக்கப்படும் நமது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசை அமைத்தவரும் எம்.எஸ்.வி. அவர்களே.. மகாகவி பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கும் இசை அமைத்தவர்...

தமிழ்த் திரைப்படங்கள் இருக்கும் வரை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களது பெயரும் புகழும் நிலைத்து நிற்கும். இத்தனை அளப்பரிய சாதனை படைத்த இசைமேதை எம்.எஸ்.வி. அவர்களுக்கு வாழ்நாளில் தேசிய அளவிலான விருதுகள் அளிக்கப்படாதது பெரும் சோகத்துக்குரியது.

இந்த தமிழ் மண்ணை இசையால் தாலாட்டிய மாபெரும் இசைமாமேதை இன்று நம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு பிரிந்துவிட்டார்.. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் தமிழ்த் திரை உலகத்துக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment