1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர்.
சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரராக விளங்கினார்.
இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.
தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.
பெரு (Peru) நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.
தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்துவிளையாடிய ‘சே குவேராவின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.
இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது.
இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார்.
இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே குவேரா முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் (Argentina) திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா (Bolivia) , பெரு (Peru), ஈக்குவடோர் (Ecuador), பனாமா (Panama), கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா (Nicaragua ), ஹொண்டூராஸ் (Honduras), எல் சல்வடோர் (El Salvador ) ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார்.
உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா (Hilda Gadea) அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரை பிற்காலத்தில் சே குவேரா திருமணம் புரிந்தார் இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன.
இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.
சே’, அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது. 1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவர் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார்.
இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார்.
அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயிகளிடம் குவேதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார்.
பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்கநேரிட்டது.
இந்த நேரத்தில் அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.
நிக்கோலோபஸ்க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.
■ பிடல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பும்,கியூபாவில் போராட்டமும்
கியூபா மண்ணின் தலைஎழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு 1955, ஜூலை மாதம், ஒரு இரவில் மெக்ஸிகோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடக்கின்றது. அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது. சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட்ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது… சக்திகள் இடம் மாறின.
இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது. காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச் சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழக்கின்றனர். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழக்கபடுகின்றது இராணுவத்தினர் சிறைபிடிக்கபடுகின்றனர்.
1957, ஜனவரி 17ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார்..
கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்ட ‘சே’ கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர் காடுகளிலும், மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.
”சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் (Santa Clara) கைப்பற்றினார் .
கியூபாவை ஆண்ட கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த்தியது.
1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் சேகுவேராவை ஒரு கியூபன் என்றுஅறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார்.
அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத்தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.
அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.
அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது.
மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார் .
சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ
உண்மையில் ‘சே குவேரா பிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார்.
அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.
இந்த மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது.
பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.
■ 1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.
● காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
● நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள்.அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
● பிற்பகல் 3.30… காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.
காலில் குண்டு அடிபட்ட நிலையில் சே குவேரா
● மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
● இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது.. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
● தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
● அக்டோபர் 9… அதிகாலை 6.00… லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
● பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப