June 3, 2015

எமது காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

வாகரை முருக்கையடிமுனை கிராமத்தில் படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளப்பெற்றுத்தருமாறு கோரி பொதுமக்கள் வாகரை பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக வாகரை முருக்கையடிமுனை கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று பின்னர் மார்ச் மாதம் 2007ம் ஆண்டு தாங்கள் மீண்டும் தங்களது கிராமத்திற்கு திரும்பியபோது,
அங்கு தங்களது வாழ்விடங்களில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்ததாகவும். தங்களை வற்புறுத்தி கையொப்பம் பெற்ற இராணுவத்தினர் ஊரியன்கட்டு பகுதியில் 18 பேர்ச்சஸ் காணிகளை வழங்கியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதிகளில் குடிநீரைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் தாங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் எந்தவித வளங்களும் இன்றி வறண்ட பிரதேசமாக உள்ளதால்,
தாங்களது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு தாங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த கஸ்டப்படுவதால் தற்போது நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தங்களது காணிகளில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றி எங்களது காணிகளை பெற்றுத்தருவதற்கு வாகரை பிரதேச செயலாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.இராகுலநாயகியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாங்கள் கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 2006ஆம் ஆண்டில் மே மாதத்தில் முருக்கையடிமுனை கிராமத்தினை விட்டு இடம்பெயர்ந்தோம் பின்னர் 2007ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நாங்கள் மீள் குடியேறுவதற்காக எமது கிராமத்திற்கு திரும்பிய போது எமது வாழ்விடங்களில் படையினர் முகாம் இட்டுள்ளதை தெரிந்து கொண்டோம்.
வாழ்ந்த கிராமமானது வளமிக்க மண்னையும் நிரந்தர வருமானம் தரத்தக்க மரங்களையும் கொண்டிருந்ததுடன் வளமிக்க மண் என்பதால் வீட்டுத் தோட்டத்தின் ஊடாக அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வழிகளை கொண்ட கிராமமாக இருந்தது.
ஆற்றையும் கடலையும் அண்மித்ததாக எமது கிராமம் இருந்ததால் விரும்பிய நேரத்தில் கடற்றொழிலை செய்வதற்கு மிக இலகுவாக இருந்ததுடன் கடற்றொழில் உபகரணங்களுடன் பயணப்படுவதும் மிக இலகுவானதாகவும் இருந்தது.
மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இக்கிராமத்தில் வாழ்ந்த எம்மை அங்கு மீளக்குடியமர்த்தாமல் ஊரியன்கட்டு என்ற பிரதேசத்தில் வீடமைப்புக்களை செய்து குடியேற்றியுள்ளீர்கள். முருக்கையடிமுனையில் சுமார் 80 பேர்ச்சுக்கு மேற்பட்ட காணியில் வசித்து வந்த எமக்கு தற்போது வெறும் 18 பேர்ச் அளவுள்ள காணிகளே வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் வீடமைப்புக்களை செய்த இடமானது எவ்வித வளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்காத நிலமாக உள்ளது. ஊரியன்கட்டில் குடி தண்ணீரை பெற்றுக் கொள்வதற்கே கடும் கடின நிலையில் உள்ளது. இங்கு எவ்வாறு நாம் வீட்டுத் தோட்டங்களை அமைத்து எமது வாழ்வை நகர்த்துவது.
தற்போது மீளக் குடியேற்றப்பட்டுள்ள ஊரியன்கட்டில் இருந்து கடல் மற்றும் ஆற்று மீன் பிடிக்கு செல்வதாயின் நாளந்தம் ஒரு கிலோ மீற்றருக்கு மேல் நடந்து செல்ல வேண்டி இருப்பதுடன் மீன் பிடி உபகரணங்களையும் தூக்கி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதனால் இரவு நேர மீன்பிடி உட்பட எமது வாழ்வாதரமான மீன்பிடி நடவடிக்கையே ஒட்டு மொத்தமாக அழிவுக்குள்ளாகி வருகின்றது.
47 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள ஊரியன்கட்டில் நண்ணீரை பெற்றுக் கொள்ள மிகக் கஸ்ரப்படுவதுடன் கரல் கலந்த நிலத்தடி நீரினையே சில இடங்களில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
மழை நாட்களில் வெள்ளம் தேங்கி நிற்கும் இக் கிராமத்தில் போக்குவரத்து முற்றாக செயல் இழப்பதுடன் தொற்று நோய்களும் பரவி எங்களை வாட்டுகிறது.
மட்டு திருமலை பிரதான வீதிக்கருகில் இருக்கும் எமது கிராமமான முருக்கையடிமுனை கிராமத்தில் இருந்த போது எவ்வித போக்குவரத்து வசதியீனங்களையும் நாம் எதிர்கொண்டதில்லை.
ஆனால் தற்போது ஊரியன்கட்டில் இருந்து சுமர் ஓரு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றால் தான் பிரதான வீதிக்கு செல்ல முடிகிறது. வயோதிபர்கள் நோயாளிகள் கடும் அவஸ்த்தைப்படுவதுடன் பாடசாலை சிறார்கள் நடந்து சென்று வரும் போது ஆபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
2007ஆம் ஆண்டில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் எழுத்தப்பட்ட கடிதங்களை கையளித்து எம்மை அச்சுறுத்தி எமது கையொப்பங்களை பெற்றுக்கொண்டனர்.
அப்போது இருந்த நிலையில் அச்சத்தாலும் அச்சுறுத்தல்களாலும் நாம் அக் கடிதங்களில் கையெழுத்திட்டிருந்தோம். எமது காணிகள் அக் கடிதங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக எமது விருப்பத்திற்கு மாறாக கையகப்படுத்தப்பட்டதாக தற்போது அறிகின்றோம் என மேற்படி விடயங்கள் அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment