June 16, 2015

இலங்கை குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை ஆகஸ்டில் வெளிவரும் என அமெரிக்கா நம்பிக்கை!

இலங்கை தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் இரு மாதங்களில் வெளிவரும் என அமெரிக்க அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் அமெரிக்கா நேற்று அறிக்கையொன்றை வெளியிட்ட எரிக் ரிச்சட்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என அவர் இதன் போது தமது அரசாங்கத்தின் சார்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அமெரிக்கா முன்நின்று ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமர்வின் போது இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படலாம் என பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ளமையின் அடிப்படையிலேயே அமெரிக்கா இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment