மகிழடித்தீவு முதலைக்குடா பிரதேசத்தில் இறால் வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று (17) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டம் மகிழடித்தீவு சந்தியில் இருந்து மண்முனை
தென்மேற்கு பிரதேச செயலக வரை சென்று குறித்த விடயம் தொடர்பான மகஜரை பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களிடம் கையளித்து ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.கையளிக்கப்பட்ட குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதவாது,மகிழடித்தீவு முதலைக்குடா பிரதேசத்தில் இறால் வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல், எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் குடிநீரை நாசப்படுத்தும் வகையில் இறால் வளர்ப்பதற்கு முன்னால் பிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை இப்பிரதேச பொதுமக்களாகிய நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.எந்த காரணம் கொண்டும் எமது பிரதேசத்தில் இறால் வளர்ப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். அரசாங்க அதிபராகிய உங்களிடம் தாழ்மையோடு கேட்டுக்கொள்வது இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம். இதற்கு முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்தால் அவர்களை உடனடியாக அனுமதியை ரத்து செய்து விடவும் பூர்வீக காலம் தொடக்கம் மகிழடித்தீவு, முதலைக்குடா, பண்டாரியாவெளி, படையாண்டவெளி ஆகிய கிராமங்களில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களை குடியெழுப்ப வைக்காதீர்கள்.ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் உழைப்பதற்காக எங்களை கொல்ல வேண்டாம். இதற்கு மிகவிரைவில் தீர்வு காணாவிட்டால் எமது போராட்டம் தொடரும், ஜனாதிபதி வரை செல்லும். தயவு செய்து இத்திட்டத்தை நிறுத்திவிடும்படி பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.இத்திட்டத்தின் ஊடாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் தீமைகள், முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி கிராம மக்களின் குடிநீர் உப்பு நீராகிவிடும்,
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள வயல்நிலங்கள் வேளாண்மை செய்ய முடியாத உவர்நிலமாக மாறிவிடும், இங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதால் சுற்றாடல் மாசடையும், அரியவகையான மீன்னினங்கள் தாவரங்கள் அழிவடையும், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் போய்விடும் எனவே இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தவும் – என குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment