May 26, 2015

சிதம்பரநாதக்குருக்களின் மறைவு சைவத்தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்!

திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்களின் மறைவு சைவத்தமிழுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்துமக்களின் வாழ்வின் அடிப்படை அம்சமாகக் கருதப்படுகின்ற
பஞ்சாங்கங்களில் ஒன்றான திருக்கணித பஞ்சாங்கத்தைப் பல்லாண்டுகளாக வெளியிட்டு இந்துமக்களின் பேராபிமானத்தைப் பெற்ற குருக்கள் ஐயா வேத ஆகம மற்றும் சோதிட அறிவை இலங்கை சைவ உலகிற்கு வழங்க வேண்டும் என்ற பெருவிருப்புடன் செயற்பட்டவர்.
இவ்வாறு தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்.சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகக் கொண்டவருமான திருக்கணித பஞ்சாங்கக் கணிதரான சிதம்பரநாதக் குருக்களின் மறைவை முன்னிட்டு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குருக்கள் அவர்கள் சரசாலை ஸ்ரீ வீரமகாளியம்மன் ஆலயத்தின் பூசகராகக் கிரியைப் பணிகளை மேற்கொண்டவர்.1970 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகச் சோதிடத் துறையில் ஈடுபட்டுத் தமது இறுதிக் காலம் வரை திருக்கணித பஞ்சாங்கத்தைக் கணித்துத் தொகுத்து வெளியிடும் பணியினை மேற்கொண்டார்.
குருக்கள் அவர்கள் அந்தணர்க்கே உரிய அற ஒழுக்கத்தோடு வாழ்ந்ததோடு முக்கியமான பல ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்கு பிரதிஷ்டா குருவாகவிருந்து கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார்.
ஆன்னாரின் அறிவு மற்றும் புலைமை கருதி சைவத்தமிழ் அமைப்புக்கள் பலவும் கௌரவப் பட்டங்களை வழங்கி அவரைப் பாராட்டியுள்ளன. இலங்கை அரசு வழங்கிய “கலாபூஷணம்” எனும் விருதும்,இலண்டன் சைவத்திருக் கோயில் சபை வழங்கிய “வேதாகம வித்தகர்” என்ற படடமும் அவற்றுள் பிரதானமானவையாகும்.
இலங்கையில் மூத்த ஒரு சோதிடக் கலைஞராக,கிரியைகளை மேற்கொள்ளும் அந்தண சிரேஷ்டராக துயருகின்ற மக்கள் மனதுக்கு ஆறுதல் கூறும் மென்மையான வார்த்தைகளைத் தருபவராகத் தமது வாழ்நாளை இந்துமக்களின் மேம்பாட்டிற்காகவே அர்ப்பணித்த குருக்கள் ஐயாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய பெரியோரின் பணிகள் என்றென்றும் விதந்து போற்றப்படும்.
அவர் தம் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் நகர் நிரூபர்-
sithamparanaathakkurukkal
IMG_3960

No comments:

Post a Comment