April 16, 2015

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி!

சவுதி அரேபியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எஜமானியை கொன்ற மனநோயாளி பெண்ணின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு தனது எஜமானியை கொன்ற இந்தோனேசியப் பெண்ணான சிட்டி சைனப் என்பவருக்கு நேற்று மதினா நகரில் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரசு இன்று அறிவித்துள்ளது.

அந்த எஜமானி தன்னை மிகவும் மோசமாக நடத்தியதால் அவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்திருந்த அந்த இந்தோனேசியப் பெண், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததால் அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், அவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை அறிந்து உலகின் பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அவரது குடும்பத்துக்கோ அல்லது இந்தோனேசிய அதிகாரிகளுக்கோ சவுதி அறிவிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதுதவிர இந்தோனேசியாவின் தற்போதைய ஜனாதிபதி, அவருக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் பலர் தமது ஆட்சிக்காலத்தில் குறித்த பெண்ணை விடுவிக்கும் படி அந்நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் கடிதமும் அனுப்பியிருந்தனர். அதையும் மீறி நேற்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச்சம்பவமானது இந்தோனேசிய மற்றும் சவுதி இடையே ராஜதந்திர ரீதியில் முறுகலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றியமை கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இவரையும் சேர்த்து, இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில் மட்டும் சவுதியில் 35 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment