April 14, 2015

புதுவசந்தம் மலரட்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

வடக்கின் வசந்தம்' என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மாகாணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இது ஒரு அரசியல் செயற்பாடு. இதனால் சென்ற வருடம் வரை 'வசந்தம்' என்ற சொல் ஆக்கிரமிப்பை சுட்டும் சொல்லாக இருந்தது.
 

அப்படியான வசந்தம் போய்விட்டது. இனி வரப்போவதானது புது வசந்தம் என்று கூறி அதை மலரச் செய்யும் விதத்தில் இந்தியத் துணைத் தூதரகமும் எமது மாகாண சபையின் கல்வி அமைச்சும் இந்த நிகழ்வை ஆக்கித் தந்துள்ளமை சாலப் பொருத்தமாக அமைந்துள்ளது. 

இந்தியத் துணைத் தூதரகமும் வட மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நெல்லியடி மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடத்திய 'மலரட்டும் புதுவசந்தம்' நடன நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு: புதிய வசந்தம் ஒன்று மலர வேண்டுமானால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். 

எம் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளை நீக்கப்பட வேண்டும். நாமாக நாம் மலர நாமகள் அருள் புரிய வேண்டும். இந்தப் புத்தாண்டில் மத்தி எம் மீது திணித்திருக்கும் அரச ரீதியான, நிர்வாக ரீதியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் எனப் பிரார்த்திப்போம். 

எம்மைச் சுற்றி இராணுவ சூழலைத் தொடர்ந்து வைத்திருந்து எம்மைச் சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்பட வைத்துக் கொண்டு வருவதை இனியாவது நீக்க வேண்டும் எனப் பிரார்த்திப்போம். 

பிரார்த்தனையின்போது இந்திய அரசின் அலகும் சேர்ந்து தோளோடு தோள் நின்று எமக்கு உறுதுணையாக நிற்பது பாரதம் எமது மலர்ச்சிக்கு வித்திடும் என்ற நற்செய்தியை வெளிக்கொண்டு வருவதாக நிற்கின்றது. -என்றார்.

No comments:

Post a Comment