April 14, 2015

தமிழரசுக்கு 51 விழுக்காடு!ஏனையவைக்கு மீதி 49 விழுக்காடே!

கூட்டமைப்பு பதிவு விவகாரத்தினில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மாற்றப்பட வேண்டும்.    

அவ்வாறு மாற்றப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கையிலேயே, இலங்கைத் தமிழரசுக் கட்சி கையயாப்பமிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில்; முக்கிய மற்றும் சிரேஷ்ட தலைவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையினில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில், அங்கத்துவக் கட்சிகளிடையே கொழும்பில் கடந்த மாத இறுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது.  இதன் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளினாலும், முன்வைக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஆராய்ந்து அதனடிப்படையில் செயற்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.    இதன் பின்னர், கடந்த 7 ஆம் திகதி அடுத்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது, புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுடன் பேசியே, ஓர் முடிவைச் சொல்ல முடியும் என்று கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 17 ஆம் திகதி இது தொடர்பில் இறுதி முடிவு எட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.    இதற்கிடையில், யாழ்.நகரிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பணிமனையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.    இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நான்கு கட்சிகளுக்கும் சமனான தேர்தல் ஆசனப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.  

  இதன் போது தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இணங்கும் பட்சத்திலேயே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையயழுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment