April 13, 2015

நாளை தமிழ்புத்தாண்டு காலையில் முதலில் செய்வது !

தமிழ் புத்தாண்டு தினத்தை நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்பது பற்றி மாலை மலர் ஜோதிடர் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி கூறியதாவது

சூரியனை அடிப்படையாக கொண்டே இந்த உலகம் இயங்குகிறது. சூரிய
பகவான் சித்திரை மாதம் தான் வலுவாக தொடங்குவார். எனவே 12 தமிழ் மாதங்களில் சூரியன் வலுவடையும் சித்திரை மாதத்தை நமது முன்னோர்கள் முதல் மாதமாக வைத்தனர். சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. சூரியனை தந்தை வர்க்கமாக போற்றி வழிபடுதல் வேண்டும். 

அந்த அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று நமக்கு உடலும் உயிரும் தந்த நமது முன்னோர்களை வழிபட வேண்டும். முன்னோர் வழிபாடு என்பது நமது குலத்தை, குடும்பத்தை செழிக்க வைக்கும் வழிபாடாகும். எனவே நாளை புத்தாண்டை தொடங்கும் போது முன்னோர்களை வழிபட்டு தொடங்கினால் அந்த ஆண்டு முழுவதும் வெற்றி மீது வெற்றி பெறலாம். 

பெற்றோர் உடையவர்கள் நாளை மறக்காமல் தாய்-தந்தையரிடம் ஆசி பெற வேண்டியது அவசியமாகும். நாளை பெற்றோர் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்றி கொடுத்து அவர்களது மனம் குளிரும்படி நடந்து கொள்ள வேண்டும். நாளை காலை எழுந்து குளித்து முடித்ததும் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். 

இதுதான் சித்திரை மாதத்தின் முதல் செயல்பாடாக இருக்க வேண்டும். தாய்-தந்தை இருவரும் மனம் மகிழ்ந்து வாழ்த்து தெரிவிக்கும் போது அந்த வாழ்த்தானது பெறுபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் தேடி கொடுக்கும். 

பெற்றோர் இல்லாதவர்கள் தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளவர்களிடம் அல்லது குரு அந்தஸ்தில் உள்ளவர்களிடம் ஆசி பெறவேண்டும். அதுவும் இல்லையெனில் உங்கள் வாழ்வில் யார் ஒருவர் பிரதிபலன் பாராமல் உங்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களிடம் ஆசி பெறலாம்.

No comments:

Post a Comment