April 11, 2015

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலய காணிகளை பார்வையிட அனுமதியில்லை மக்கள் அங்கலாய்ப்பு(படம் இணைப்பு)

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக காணி உரிமையாளர்கள், காணிகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து 
கிராம அலுவலர் பிரிவுகளும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ஆனால் இங்கு எம்மை அனுமதிக்கிறார்கள் இல்லை என்று கூறி மக்கள் அங்கலாய்த்தனர்.1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் இறுதிப் பகுதிக்குள் மிகுதிக் காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடுத்த கட்டமாக வலி வடக்கின்; தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராமஅலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராமஅலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே - 237 கிராமஅலுவலர்),  கட்டுவன் (ஜே - 238 கிராமஅலுவலர்), தென்மயிலை (ஜே - 240 கிராமஅலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராமஅலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராமஅலுவலர்), பலாலி தெற்கு (ஜே - 252 கிராமஅலுவலர்) ஆகியவற்றின் காணிகளும், கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே - 284 கிராமஅலுவலர்) பிரிவுகளிலுள்ள 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்திருந்த நிலையில், சனிக்கிழமை(11) பகுதி பகுதியாக மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைக்காக காணிகளை பார்வையிடுவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் அடிப்படையில் சனிக்கிழமை (11) காணிகளை பார்வையிட மக்கள் வந்திருந்தனர்.

ஆனால் அங்கு குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதியாகவே காணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

தற்போது விடுவிக்கபட்ட பகுதிகள் செறிவு குறைந்த குடியிருப்புக்கள் உள்ள பகுதிகள் ஆகும். இதனால் வருகை தந்திருந்த மக்களில் பலர் தமது காணிகளை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளுக்கப்பால் தொலைவில் நின்று பார்த்துவிட்டு அங்கலாய்ப்புடனும் விரக்தியுடனும் சென்றனர்.

No comments:

Post a Comment