March 1, 2015

மோடி வருவாரு! மைத்"திரி"யை தூண்டி விடுவாரு! - ஞானசம்பந்தன்!

தமிழர்களில் சிலர் மோடி வருகையால் 'சுயநிர்ணய உரிமையுடன்' கூடிய 'சுயாட்சி' அரசியல் தீர்வு கிடைத்து விடும் என நம்புகிறார்கள்.. சிங்களவர்களோ இந்தியா
'போர்க்குற்றத்தில்' இருந்து தம்மை முற்றாக காப்பாற்றிவிடும் என நினைக்கிறார்கள்.
வரும் செய்திகளோ மோடி புராதன புத்தமத தலங்களுக்கு விஜயம் செய்து வட இந்திய தொடர்புகளை
புதுப்பித்து சீனாவை விரட்டும் மூலோபாயத்தையே செயற்படுத்தப்போவதாக சொல்கிறது. இதற்கு வழிஏற்படுத்தி கொடுத்த தமிழர்களை மோடி மறந்துவிட்டதாகவே படுகிறது.
இங்கு 60 வருடமாக பற்றி எரியும் 'இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு' பற்றியோ ஐ.நா வரை சென்றுள்ள 'இனப்படுகொலைக்கான நீதியான சர்வதேச விசாரனை' பற்றியோ எந்த செய்திகளும் இல்லை. அதுபற்றி கவலைப்பட , சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு அழுத்தம் கொடுக்க, பாதிக்கப்பட்ட தமிழர் முகாம்களை சற்றே எட்டி பார்க்க அவர் என்ன டேவிட் கமரோனா?
குறைந்தபட்சம் இலங்கையில் புத்தமதத்தின் வருகைக்கு முன்னரான நான்கு தொன்மையான சிவனின் ஈஸ்வரங்களும் முருகனின் கதிர்காமப் பதியும் இருப்பது ஆவது இந்த இந்துமத காரருக்கு தெரியுமா?
தென்னிந்திய சமயகுரவர்களால் பாடல் பெற்ற இத்திருத்தலங்களை விழுங்குவது போல் இன்று சிங்கள அரசாங்க ஆதரவுடனான ஆக்கிரமிப்பு புத்தமதவிகாரைகள் முளைத்திருப்பதையும் அவற்றை சுற்றிய பிரதேசங்கள் "புனித பிரதேசங்களாக" அரசால் சுவீகரிக்கப்படுவதையும் இவர்பார்க்க மாட்டாரா?
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் ஈழநிலத்தின் எல்லையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் (எல்லை+ஆளன்/ஆள்பவன்-BorderKing) 44 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த அநுராதபுரத்தில் தான் சுவாமி விவேகானந்தரின் பிரசங்கத்திற்கெதிராக மதவெறிபிடித்த சிங்கள பிக்குகள் 1897களிலெயே கலவரத்தை ஆரம்பித்தார்கள் என்பது மோடிக்கு வரலாற்றிலிருந்து ஒரு கொசுறு செய்தி.
வடக்கு கிழக்கில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் குண்டுவீசி அழிக்கப்பட்ட இந்து,கிறிஸ்துவ மததலங்களுக்கும், ராஜீவ் காங்கிரசின் "இந்திய அமைதிப்படை" மனிதப்படுகொலை நிகழ்த்திய யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கும் மோடி நிச்சயம் விஜயம் செய்யவேண்டும்.
மோடிக்கு ஆதரவு வழங்கிய தமிழர் அமைப்புக்களுக்கு இது சமர்ப்பணம். 'Tamils for Modi'அமைப்புக்களும் 'மாற்றம் விரும்பிய' தமிழ்த் தேசிய அரசியல் இராஜதந்திரிகளும் தமது செயல்களால் பதில் கூறவேண்டிய தருணம் இது, அல்லது ஏமாற்றமே கிட்டும்.
-ஞானசம்பந்தன்-

No comments:

Post a Comment