March 1, 2015

தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர் !

எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு அரசு வேண்டிய  பணஉதவிகளையும் அனுசரணைகளையும் வடக்கு-கிழக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.   ஆனால் எமக் குத் தரப்படுவன யாவும் எமக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டியவை. அவை புதியன அல்ல என்ற எண்ணம் எங்கள் மக்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது.  

 காணி எங்களுடையது. அதை இதுவரை ஆக்கிரமித்து வைத்துத் திரும்பத்தர முயற்சிக் கின்றீர்கள். வரவேற்கின்றோம்.   தமிழருக்கு  கூட்டுறவுகள் எம்மால் திறமையாக நடத்தப்பட்டு வந்தவை. அவை அரச உள்நுழைவின் காரணத்தால் திறமை இழந்தன. இதனால் எமது மக்களின் சுதந்திரம் பறிபோனது. எனவே சுதந்திரமாகக் கூட்டுறவுத்துறை வடமாகாணத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆவன செய்ய உதவுவோம் என்றும் கொழும்பு அரசு கூறும்போது எம்மிடம் இருந்து பறிபோனவையே எமக்குத் திரும்பக் கையளிக்கப்படுகின்றன. எனினும் உங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கின்றோம்.
 கடல் வளங்கள், நீர் வளங்கள் எம்மால் பாவிக்கப்பட்டு வந்தவையே. அதற்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. அவற்றை நீக்க எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். எம்மிடம் இருந்து பறிபோனவைற்றையே நாம் திரும்பப் பெறும் காலம் கனிந்துள்ளது.   6% வருடமாகத் தீர்க்கப்படாத எமது பிரச்சினை பற்றி கூறிக் கொண்டு இருக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். பொருளாதார விருத்தியால் மட்டும் எமது மக்கள் குறை தீர்ந்துவிடாது.    பலாத்காரமாகப் பறித்ததைத் திரும்பக் கையளித்தால் மட்டும் எமது பிரச்சனைகள் நீங்கி விடா. சட்டப்படி சேர வேண்டிய உரித்துக்கள் சேரவேண்டும்.  

  இன்றைய அரசு எம்மாலும் உருவாக்கப்பட்டது. அதில் எமக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் இராணுவத்தினரிடம் போய் நாங்கள் எந்த ஒரு இராணுவ முகாமையும் அப்புறப்படுத்தமாட்டோம் என்றால் அது ஒரு ஏமாற்று வித்தையாகவே முடியும். அதன் அர்த்தமாக நாங்கள் புரிந்து கொள்வது, 'தேர்தல் வருகின்றது. நாங்கள் தமிழருக்கு எதுவும் கொடுக்கவில்லை, கொடுக்கமாட்டோம்' என்று சிங்களச் சகோதர மக்களுக்குக் கூறுவது போல் தெரிகிறது. இதனால் அவர்களின் வாக்குகளைப் பெறலாம் என்ற எண்ணம் இருக்கக்கூடும். 

சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்த பின் தமிழர்களுக்கு நாம் உரியதைச் செய்வோம் என்று அரசு கூறக்கூடும். ஆனால் அவ்வாறு செய்வது சிங்கள மக்களை ஏமாற்றுவதாக முடியும். நீங்கள் எமக்கு நன்மை செய்யப் போய் சிங்கள மக்களை ஏமாற்றுவது முறையல்ல.  அதற்குப் பதிலாக தமிழ் மக்கள் இதுவரை காலமும் மிகவும் நொய்ந்து போயுள்ளார்கள். அவர்களுக்கு ஐக்கிய இலங்கையினுள் மிக உயர்ந்தளவு அதிகாரப் பகிர்வை புதிய அரசியலமைப்பின் ஊடாக வழங்கவுள்ளோம். நாம் யாவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் வாழ வழி வகுக்க உள்ளோம் என்று கூறி எமக்கு வாக்களியுங்கள் என்று கோருவதே முறையயன்று எனக்குப்படுகின்றது.  

  சிங்கள மக்களையும் தமிழ்ப் பேசும் மக்களையும் உங்கள் நம்பிக்கைக்கு இலக்காக்குங்கள். யார் தேர்தலில் என்ன சொன்னாலும் நீங்கள் நீதியின் வழியில், நேர்மையின் வழியில், ஒற்றுமையின் வழியில், மனிதாபிமான முறையில் நடந்து செல்லப் பாருங்கள் என்றே தாழ்மையுடன் வலியுறுத்துகின்றோம்.   எமது புதிய அரசு தென்னிலங்கை மக்களின் மனதைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஒரு சுமுகமான தீர்வைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.


 அதே போல் எமது மனங்களையும் அலசி ஆராய ஆவன செய்ய வேண்டும். எமது மாகாண மக்களின் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்த பலவாறான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.    அதனை மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்தே செயலாற்ற வேண்டும். மேலும் பலவிதங்களில் எம் இருசாராரின் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு பலவித நன்மைகளைக் கொண்டு வரலாம் என்றார்.

No comments:

Post a Comment