March 2, 2015

தமிழ்த் தேசத்தின் இறைமை கிடைக்கும் வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பணி தொடர வாழ்த்துக்கள் – காசி ஆனந்தன்!

தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுகின்றவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பணி தொடரவேண்டும் என்று மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன் என புரட்சி ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் வாழ்துரையில் தெரிவித்துள்ளார்.


கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ஸ்கைப் சமூக வலைத்தளம் ஊடாக கருத்து வெளியிடும் போதே காசி ஆனந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்தேசிய மக்கள் முண்ணனி தன்னுடைய ஐந்தாவதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதையிட்டு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பல்லாண்டு காலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பணி தொடரவேண்டும்.

பிரித்தானியர் தமிழீழத்தினுடைய இறையாண்மையை விட்டுச் சென்றார்கள். அதை சிங்களவர்கள் பற்றிக் கொண்டார்கள். அந்த இறையாண்மை தமிழர்களிடமே இருக்கின்றது.

தமிழீழம் தமிழர்க்குரியது என்று வாதாடி வந்தார் தந்தை செல்வா. அதே போன்றுதான் தலைவர் பிரபாகரன் அவர்களினுடைய தலைமையில் அந்த மண்ணில் நடந்த போராட்டத்தில் ஐம்பத்து ஐயாயிரம் விடுதலைப்புலிகள் களத்தில் தமிழீழம் எங்கள் தாகம் என்று உறுமித்தான் – முழங்கித்தான் தங்களை உயிர்க் கொடையாக்கி அந்தக் களத்தில் மாவீரம் படைத்தார்கள்.

ஆனால் இன்று தமிழர் பிரச்சினையை தீர்க்க 13 ஆம் திருத்தச் சட்டம் கிடைத்தால் மட்டும் போதும் என்று கொட்டாவி விடுகின்ற ஒரு கொடுமையான காட்சியைப் பார்க்கிறோம்.

அது மட்டுமல்ல அந்த மண்ணில் சின்னச் சின்ன அரசியல் நகர்வுகளைச் செய்தால் போதும் என்று அந்தத் தரப்பினர் கருதுகிறார்கள். இராணுவம் வெளியேறிய நிலங்களை ம்டடும் நாம் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். இந்த அற்ப சலுகைகளுக்காக மட்டும் ஈழ விடுதலைப்போராட்டம் வளர்க்கப்படவில்லை.

இலங்கையில் தனித் தமிழீழத்தின் விடுதலை கேட்பது சட்டத்திற்கு, அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக இருக்கலாம். அது தேசத்துரேகமாக இருக்கலாம். ஆனால் தமிழீழம் எங்கள் தாயகம் என்று சொல்வதை எந்த நாட்டினதும், எந்தச் சட்டமும் தடைசெய்யமுடியாது.

இந்திய அரசியலமைப்பில் காஸ்மீர் இருக்கிறது. பிரிட்டிஸ் அரசியலமைப்பில் ஸ்கொட்லாந் இருக்கிறது . ரஸ்யா அரசியலமைப்பில் செச்சிணியா இருக்கிறது. தமிழீழம், இலங்கை அரச அமைப்பில் இல்லை.

முதலில் அந்த அரசியலமைப்பு தமிழீழத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தை தமிழ் தேசிய தலைமைகள் முன்னெடுக்கவேண்டும். இந்த வீச்சான விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி அந்த மண்ணில் நிகழவேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த உணர்வோடு போராட்டங்களை நடத்தி வருவதை நான் அறிவேன். அவர்கள் கொள்கையிலிருந்து நழுவ வில்லை என்பதை நான் தெளிவாக அறிவேன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய தந்தை குமார் பொன்னம்பலம் தன்னை தமிழீழ விடுதலைக்காக முழுமையாக கொடை தந்தவர். அவருடைய பிள்ளை கஜேந்திரகுமார் பொன்னம்பம் தலைவராக இருக்கிறார். அந்த மண்ணில் விடுதலை மூச்சோடு இயங்கி வருகின்ற கஜேந்திரன் அதன் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

தமிழீழத்தில் வாழுகின்ற இளைஞர்கள், மாணவர்கள் நம்பிக்கையோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்தில் இந்த அமைப்பு தங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தங்களுடய கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் களமாகும் என்று நம்புகிறார்கள்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் தான் நான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை மனமார வாழ்த்துகின்றேன். அவர்களுடைய 5 ஆம் ஆண்டு நிறைவில் அவர்களுடைய பணி தொடரவும் தமிழீழ மக்களுடைய விடுதலைப் பயணம் தொடரவும் வேண்டும்.

இப்படி ஏன் சொல்கிறேன் என்றால் அந்தப் பயணம் நின்றுவிடுமோ, அந்தப் பயணம் திசைமாறிவிடுமோ, அந்தப் பயணம் குழம்பி விடுமோ என்பதைப் போன்ற ஒரு சூழ்நிலையை அந்த மண்ணில் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள். காலம் காலமாகத் தமிழீழ மக்கள் புறக்கணத்து வந்த இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டட்டத்தில், தமிழ் மக்களின் தலைமைகள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே கலந்து கொள்கிறார்கள்.

அந்த மண்ணில் தமிழர்கள் புறக்கணித்த சிங்களக் கொடியைத் தங்கள் கையில் தாங்கி உலாவருகிறாரார்கள். உரிமைகள் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றதொரு கால கட்டத்தில்தான் நான் இந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை வாழ்த்துகின்றேன் – என்றார்.

No comments:

Post a Comment