March 9, 2015

கசப்பான அனுபவங்களை தந்த கடந்த காலம்! ஆலயங்களில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட தமிழர்கள்!

கடந்த கால அரசியல் வலராறுகளை பார்க்கின்ற போது மனிதர்களை நல்வழிப்படுத்தக்கூடிய இடமாக இருக்கக்கூடிய ஆலயங்களில், தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்ட கசப்பான சம்பவங்கள் நடந்தேறி இருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி இரண்டில் “புண்ணிய கிராம நிகழ்வு“ திருமுருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி
விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் நாவிதன்வெளி பிரதேசசபை செயலாளர் கரன், நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் எஸ்.குணரெத்தினம் மற்றும் விசேட சொற்பொழிவாளராக சாம்பசிவம் குரு, இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய குருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
இந்த நாட்டிலே மதம் சார்ந்த வணக்க ஸ்தலங்கள் மதிக்கப்பட வேண்டியவையாக இருந்த போதும் அதனை கருத்தில் எடுக்காது அந்த இடங்கள் புனிதமானது என்று கருதாமல் அந்த ஆலயங்களிலிலே தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் இன்றும் எம்மனங்களில் நீங்காத வடுக்களாகவே இருந்து வருகின்றது.
இந்து மதமானது தொன்மையும் பழமையும் வாய்ந்த ஒரு மதமாகும் அவ்வாறான மதத்திலிருந்து இன்று மக்கள் வறுமையின் காரணமாக மதம் விட்டு மதம் தாவும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. இதற்குக்காரணம் எமது மதத்தில் மதம் சார்ந்த போதனைகள் மனிதர்களிடத்தே சென்றடைவது அரிதாகவே காணப்படுகின்றது. அவ்வாறு மதம் மாறுபவர்களை அணுகி அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வறுமையான குடும்பங்களையோ கல்வி கற்கும் மாணவர்களைப் பற்றியோ சிந்திப்பதற்கும் அவர்களது வறுமையை போக்குவதற்கும் யாரும் முன்வருவதுமில்லை. இவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களை உரிய நேரத்தில் வழங்குவதுமில்லை.
தங்களுடைய மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு தாவுகின்றவர்களை எமது அரசியல்வாதிகளும், மதப்போதகர்களும் கண்டுகொள்வதில்லை இதன்காரணமாக மேலும் மேலும், மதம் மாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே போகின்றது.
காலத்தால் முற்பட்ட இந்து மதத்தின் தொன்மையினை பறைசாற்ற நாயன்மார்கள் தேவாரப் பதிகங்களை பாடி இந்து மதப் பின்னணியை வெளி உலகத்திற்கு காட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக இலங்கையில் திருகோணமலை, திருக்கேதீச்சரம் போன்ற ஆலயங்கள் தேவாரப்பதிகங்கள் பாடல்பெற்ற தலங்களாக மிளிர்ந்தவையும் குறிப்படத்தக்கது.
இன்று நடைபெறும் புண்ணிய கிராம நிகழ்வானது இன்று மாத்திரமல் சங்ககாலம் தொட்டே மன்னர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு வந்த ஒரு தொன்மை வாய்ந்த நிகழ்வாகும். இன்று மேற்குலகில் வாழும் எமது தமிழ் மக்கள் கூட எமது சமயத்தினை வளர்ப்பதிலும் தங்களது கலை, கலாசாரங்களை பேணிப் பாதுகாப்பதிலும் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றமை போற்றப்பட வேண்டியதொரு விடயமாகும்.
எனவே எதிர்காலத்தில் எமது மதம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment