February 19, 2015

தாமதிக்கப்பட்ட நீதி தொடரும் குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)!

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையானது புலம்பெயர்ந்து வாழும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை நாடுகள் வாரியாக பிரதிநிதித்துவபடுத்தும்
மக்களவைகளின் கூட்டமைப்பாகும்.  நாங்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக எமது தாயகத்திலுள்ள எமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களையும், இனவழிப்பு நடவடிக்கைகளையும் ஆதாரபூர்வமாக வெளிக்கொண்டுவருவருவதற்காக உழைத்து வருகிறோம்.


1956, 1958, 1962, 1974, 1977, 1981, 1983 ஆண்டுகளிலும், அதனைத்தொடர்ந்து குறுகிய கால இடைவேளைகளிலும் தமிழர்களுகெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்புகளை விசாரிப்பதற்காக  வெவ்வேறு சிறிலங்கா அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தமது தீர்ப்புகளாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது  குற்றம் சுமத்தி குற்றம் செய்த சிங்களவர்களை தண்டனைகளிலிருந்து பாதுகாக்கும் தீர்ப்புகளையே வழங்கின. 
இதுவரை பல தசாப்தங்களுக்கு மேலாக  நடத்தப்பட்ட பல்லாயிரம் தமிழர்களின் உயிரிழப்புகளுக்கும் கோடிக்கணக்கான பெறுமதியான சொத்தழிப்புகளுக்கும் ஒருவராவது தண்டிக்கப்படவில்லை.  ஆகையால் உள்ளக விசாரணைகளில் தமிழர்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர்.  இதன் பிரதிபலிப்பாகவே பெப். 9, 2015, அன்று வடமாகாணசபை ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் இனவழிப்பை தெளிவாகப் பட்டியலிட்டு காட்டி இதனை மனிதவுரிமை  ஆணையாளரை ஆராய்ந்து தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க பணிக்குமாறு ஏக மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன் பின்னனியில்தான் ஐநா மனிதவுரிமைகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் எமது மக்கள் பெருநம்பிக்கை வைத்து நடந்த உண்மைகள் வெளிக்கொண்டுவருவதன் மூலம் எமது மக்களின் உயிரிழப்புகள் வீணாகமாட்டதென காத்திருந்தனர்.  இந்நிலையில், விசாரணை அறிக்கை சமர்பித்தலை ஆறு மாதங்கள் பிற்போடுவதானது, ஒரு கொடிய இராணுவ அடக்குமுறைக்குள் வாழும் எமது மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கின்றது.
இந்நிலையில், "இந்த அறிக்கை மேலும் கால தாமதமின்றி வரும் ஐப்பசி மாத்தில் நிச்சயமாக சமர்ப்பிக்கப்படுமென தனிப்பட்ட ரீதியாக உத்தரவாதம் வழங்குகிறேன்" என மனிதவுரிமை ஆணையாளர் கூறியிருப்பது சிறு ஆறுதலைத் தருகிறது.  எனினும் இந்த மேலதிக கால அவகாசம் மூலம் விசாரணைக்குழு இலங்கைக்குள் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இடையூறின்றி சந்தித்து மேலதிக ஆதாரங்களை திரட்டுமாயின், அறிக்கை சமர்பணம் பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தலாம். அதற்கிணங்க, மனிதவுரிமைகள் ஆணையகம் களத்தில் நேரடியாக ஆதாரங்கள் திரட்டுவதற்கேதுவாக சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம். இம்முயற்சியொன்றே பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமத்தை நியாயப்படுத்துமென நம்புகிறோம்.  

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)

மேலதிக தகவலுக்கும், தொடர்புகளுக்கும் :
Phone: 416.830.7703

தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்
கனடியத் தமிழர் தேசிய அவை
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்                                               
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு                                                    
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை                                           
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை                                                    
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை
நெதர்லாண்ட் ஈழத்தமிழர்பேரவை                                                          
நோர்வே ஈழத்தமிழர்  அவை                                                    
சுவிஸ் ஈழத்தமிழரவை
மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு   




No comments:

Post a Comment