January 27, 2015

நாகர்கோவில் பகுதியில் ஈ.பி.டி.பி அடாவடி! பொதுமக்கள் மீது தாக்குதல் ஒருவர் படுகாயம்!

யாழ் நாகர்கோவில் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவரும் ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தினருக்கும், அந்தப் பகுதி பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இவ் மோதலின்  போது அதே பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியதாவது :

வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில் பகுதியில் நீண்டகாலமாகவே ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி கட்சி அதிக செல்வாக்குடன் இருந்ததால் பொதுமக்களால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மணல் அகழ்வினால் நாகர்கோவிலை அண்டிய கடல் பகுதியின் நீர் நேரடியாகவே கிராமத்துக்குள் நுழையும் நிலையை எட்டியுள்ளது. சிறு அளவில் கடல் அலை மேலெழுந்தாலே கிராமமே கடலுக்குள் அள்ளுண்டுபோகும் சூழல் உருவாகிவிட்டது.

எனவே இந்த ஆபத்து குறித்து எச்சரித்த பொதுமக்கள் கடந்த வாரம் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மகேஸ்வரி நிதியத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட பொலிஸார் தலையிட்டு மணல் அகழ்வதில் தற்காலிக தடையை விதித்தனர்.

இன்று காலை நாகர்கோவில் பகுதிக்கு சென்ற மகேஸ்வரி நிதியத்தின் உழவூர்திகள் வழமைபோன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டன. எதிர்ப்புக் கோசங்களை எழுப்பியவாறு மணல் அகழும் இடத்திற்கு வந்த குறித்த பிரதேச மக்களை ஈ.பி.டி.பியினர் விரட்டி விரட்டித் தாக்கினர். இதன்போது ஜீவராஜா (வயது-29 ) என்பவர் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தார். மேலும், நாகர்கோவில் பகுதியின் சமூக செயற்பாடுகளில் அக்கறையுடன் செயற்படும் இளைஞர்களுக்கு ஈ.பி.டி.பியினர் எச்சரிக்கையும் விடுத்துச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment