November 1, 2014

மண்சரிவு பேரனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கு இதய அஞ்சலிகள் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

பதுளை மாவட்ட கொஸ்லாந்த மீரிய பெத்த தோட்டத்தில் இடம் பெற்ற மண்சரிவின் போது உயிர் நீத்த மலையக மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் தமிழ்த் தேச மக்களுடன் இணைந்து
எமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.
புதன்கிழமை காலை மேற்படி தோட்டத்தில் இடம் பெற்ற அனர்தத்தை அறிந்து நாம் அதிர்ச்சி அடைந்தோம். 300க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இது இந்த வருடத்தில் இடம் பெற்ற மாபெரும் அவலம். ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்புக் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்களை நாம் இழந்தோம். அந்தத் துயரத்திலிருந்து நாம் மீள்வதற்கு முன்னரே எமது உறவுகளுக்கே ஏற்பட்ட அனர்த்தத்தினால் மிகுந்த கவலையடைகின்றோம்.

இது தவிர்த்திருக்கக் கூடிய அனர்த்தம் என்பதை அறியும் போது எமது கவலை இரட்டிப்பாகின்றது . தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் இப் பிரதேசம் பாதுகாப்பற்றது என 2005ம் ஆண்டு அறிவித்திருந்தும் கூட மக்களை பாதுகாப்பான இடத்தில் குடியேற்ற எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே எமது பக்கள் இந்தப் பேரழிவைச் சந்திக்க நேரிட்டுள்ளது. அரசின் இந்த அக்கறையீனமான பொறுப்பற்ற செயற்பாட்டிற்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றோம்.
மலையகத்தில் வேறு பல பிரதேசங்களில் இது போன்ற ஆபத்தான நிலை இருக்கின்றது. அங்கும் அனர்த்தங்கள் வராமல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக தலைமைகளை வேண்டுகின்றோம்.

மலையக மக்கள் தமது குருதியை வியர்வையாக்கி தமது இந்த நாட்டை வளப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களில் வாழ்வு நிலையோ வார்ததைகளில் எழுதக்கூடியது அல்ல. பல நூறுவருடங்கள் கழிந்தும் தமது நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர். தங்களுடைய விடுதலை தொடர்பாக அவர்கள் நடாத்தும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவினையும், ஒத்துழைப்பினையயும் வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக உறவுகளுக்கு எங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் சர்வதேச மட்டத்தில் மலையக விவகாரத்தை பேசு பொருளாக்குவதற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றைக்கும் தயாராக இருக்கின்றது என்பதையும் எமது உறவுகளுக்கத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்                      செ.கஜேந்திரன்
தலைவர்                                                  பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment