நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்த பிறகு இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்துவதுபோல, மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பதிவுகள் இட வேண்டும் என்ற உத்தரவு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு, சமசுகிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஆகியவை மொழிப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சிமொழி அலுவல் துறை எல்லா வகையிலும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், பட்டப் படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் என்றும், சட்டம் மற்றும் வணிகவியல் பாடங்கள் இந்தி வழியில் நடத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழி அலுவல் துறை சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதுமட்டுமின்றி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வே துறை, பொதுக்காப்பீட்டுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தி மொழியை கட்டாயமாக பயில வேண்டும்; சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி மொழியில் வெளியிட வேண்டும்; ஆட்சி மொழியாக அனைத்துத் துறைகளிலும் இந்தி பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் நூறு விழுக்காடு இந்தி மொழி பயன்பாடு என்பது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் 75 ஆண்டு கால வரலாறு உடையது என்பதை மத்திய அரசு மறந்துவிட முடியாது. இந்தியத் துணைக் கண்டத்தில், இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக நாட்டு விடுதலைக்கு முன்பாகவே 1938 ஆம் ஆண்டிலிருந்து திராவிட இயக்கம் தமிழகத்தில் கடுமையாகப் போராடி வருகிறது. 1965இல் இந்திய இராணுவத்தை தமிழ்நாட்டு வீதிகளில் இளைஞர்களும், மாணவர்களும் சந்திக்கின்ற அளவுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாட்டையே உலுக்கியது.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு அளிக்கப்பட்டால்தான் வேற்றுமையில் ஒற்றுமையும், தேசிய ஒருமைப்பாடும் நிலைக்கும். இந்தி மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியல் சாசன ஆட்சிமொழி அங்கீகாரம் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். மாறாக மத்திய அரசு அதிகாரத் துணைகொண்டு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால், விபரீத விளைவுகள்தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
14.09.2014 மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
14.09.2014 மறுமலர்ச்சி தி.மு.க
No comments:
Post a Comment