August 29, 2014

மாவை.சேனாதிராசா அவர்களுக்கு, காரைதீவு அறங்காவல் ஒன்றியம் பகிரங்க மடல்!

காரைதீவு பிரதேச மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தேசியத்தின் வழி பற்றுறுதியோடு இருந்திருக்கிறார்கள். இனியும் அவ்வாறே இருப்பார்கள். வடகிழக்கில்
நடைபெற்ற தேர்தல்களில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கட்சிகள் கோலோச்சி வந்திருக்கின்றன என்பதே வரலாறு. கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கையீனங்கள் ஏற்பட்ட போதெல்லாம், சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த கட்சிகளுக்கே ஒன்று மாறி ஒன்று என வாக்களித்து ஆணை வழங்கினார்கள்.
தொடக்கத்தில் தமிழரசுக்கட்சியை ஆதரித்தார்கள். அதன்பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியையும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் ஆதரித்து வாக்களித்தார்கள். காலவோட்டத்தில் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து வருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உயரிய சிந்தனையின் பிரகாரம், தமிழ் மக்களுக்கு என்று அரசியல் அடையாளமாக கட்டமைக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஈழ விடுதலைப்போராட்டதில் ஆயுதம் ஏந்தி போராடி ஜனநாயக வழிமுறைக்குத்திரும்பி விட்ட அனைத்து இயக்கங்களும், தமிழர் விடுதலைக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிவரும் இன்றைய முக்கிய காலச்சூழலில், இவர்களை பிரித்தாளும் தந்திரத்தை தாங்கள் பிரயோகித்து வருகின்றீர்கள் என்பதற்கு கடந்த 17.08.2014 அன்று காரைதீவில் நீங்கள் ஆற்றிய உரையே போதுமானது.

மிகப்பெரிய தியாகங்கள், அர்ப்பணிப்புகளின் பேறாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைக்க முயல்வது எந்த விதத்திலும் நீதி நியாயமாகாது. நீடித்து நிலையும் பெறாது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, காரைதீவு மக்களாகிய நாம் தனி ஒரு கட்சிக்கு வாக்களிக்கவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனும் ஒற்றுமைக்கே, ஓரணிக்கே வாக்களித்தோம் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதி மக்களும், வடக்கு மாகாணத்திலுள்ள எமது மக்களும் எங்களைப்போன்றே வாக்களித்திருப்பார்கள் என்றும் உறுதியாக நம்புகின்றோம். இந்த உண்மைக்கு மாறாக தனிக்கட்சி நினைப்பில் செயல்படுவீர்களேயாயின் இனிவரும் தேர்தல் கால முடிவுகள் தங்களுக்கு மோசமான படிப்பினையையே தரும். அதற்காக காலமும் காட்டும் சில முன்னெச்சரிக்கைகளையும் நீங்கள் கவனத்தில் கொள்வது நன்று.

சுமார் இருபதாயிரம் மக்கள் தொகையைக்கொண்ட காரைதீவில், அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி கிளையை திறப்பதற்கு நடத்திய கூட்டத்தில், 25 பொதுமக்கள் கூட கலந்து கொள்ளவில்லை என்பதிலிருந்து, மக்கள் தமிழரசு கட்சிக்கா? இல்லை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கா? வாக்களித்தார்கள் என்பதை தாங்கள் ஊகித்துக்கொள்ள முடியும்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமிழரசுக்கட்சியின் பரிவாரங்களாகிய, மட்டு நகர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், காரைதீவு பிரதேசசபையின் புதிய தவிசாளரும், மற்றுமொரு உறுப்பினரும், மாகாணசபை உறுப்பினர்கள் மூவரும், மாநகரசபை உறுப்பினர்கள் மூவரும், மாவட்ட கிளை திறந்த வீட்டாரும், ஆக 25 பேரளவுக்கும் குறைவானவர்களே. இதை நீங்கள் எப்படி மக்கள் மயப்படுத்தப்பட்ட நிகழ்வாக கருத முடியும்? இது உங்கள் அரசியலில் வங்குரோத்து நிலையையும், தப்புக்கணக்கு போடுவதையும் காட்டி நிற்கின்றது.

கட்சிக்கிளை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிய நீங்கள், காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவின் வீட்டில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினர் மாவட்டக்காரியாலயம் திறந்துள்ளதாக உண்மைக்கு புறம்பாக கூறியுள்ளீர்கள். இது வெறும் அப்பட்டமான பொய் என்பதை இங்குள்ள பொதுமக்களே நன்கு அறிவர். எமது பிரதேசத்துக்கு பயணம் செய்யும் எவரும் நேரில் கண்டு இதனை உறுதிப்படுத்திக்கொள்ளப்போகிறார்கள். நடுநிலை ஊடகங்களும் இதனை வெளிக்கொணரத்தான் போகின்றன.

உங்கள் உரை தொடர்பில் பொதுமக்களாகிய நாம் ஆட்சேபனை தெரிவித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, �ஓ! அப்படியா? அப்படி ஒரு ஒப்பீஸ் திறக்கவே இல்லையா?� என ஆச்சரியத்துடன் கேட்ட நீங்கள், �அங்குள்ள சிலர் கூறினார்கள். அதைத்தான் நானும் கூறினேன்� என்று சர்வசாதாரணமாக எங்களிடம் கூறினீர்கள். ஒரு கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் நெஞ்சுக்கு நீதியான ஒருவராக நீங்கள் இருந்திருந்தால், 17.08.2014 அன்று காரைதீவில் நடைபெற்ற கூட்டத்தில் பிழையான தகவலை ஊடகங்களுக்கு வழங்கி விட்டேன் என்று, அதே ஊடகங்களில் நீங்கள் பதிலறிக்கை விடுத்திருக்கலாமே? மன்னிப்பு கோரியிருக்கலாமே? ஒருவர் மீது வீண் பழி சுமத்துவது, அவரின் புகழுக்கு இழுக்குச்சேர்ப்பது உங்களுக்கு அழகையும் புகழையும் தருமா?

அம்பாறை மாவட்டத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள். "ஐ.நா சபையின் விசாரணைக்குழு தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் திருப்புமுனையான சூழலில், மக்களை விழிப்படையச்செய்து மக்களை ஒன்று திரட்டி கூட்டாக சாட்சியங்களை அளிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத்தான் தாங்கள் அம்பாறை மாவட்டத்துக்கு வருகிறீர்கள்" என்று மக்கள் நாம் எதிர்பார்த்திருக்க, நீங்களோ அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் திறந்து வைத்து விட்டுப்போகிறீர்கள். இது நல்ல தலைமைத்துவமாகுமா? அந்த தலைமைத்துவத்துக்குரிய பண்பாகுமா?

ஊடகங்களில் காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தொடர்பாகவும், காரைதீவு மக்கள் தொடர்பாகவும் சொல்லப்படுகின்ற நீதிக்குப்புறம்பான செய்திகளை மறுதளித்து, உண்மையை உலகுக்கு உரைக்க வேண்டிய சமுகப்பொறுப்பு பிரதேச மக்களாகிய எமக்கு உண்டு. இல்லையெனில் எதிர்மறையான விம்பம் எமது மண் மீது படிந்து விடும்.

பட்ஜெட் தோற்கடித்தவர்கள் ஊருக்கும் கட்டுப்படவில்லை. அறங்காவல் ஒன்றியத்திற்கும் கட்டுப்படவில்லை. ஊர்ப்பெரியவர்கள் சபையின் ஆலோசனையையும் கேட்காமல் கட்சிக்கும் கட்டுப்படாமல் பட்ஜெட்டைத்தோற்கடித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென்று கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டிருந்தும், மக்களை அவமதித்து செயல்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு பதவிகள், பொறுப்புகளை வழங்கி நீங்கள் செயல்பட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளோம்.
கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடோ அன்றி பிரச்சினையோ ஏற்பட்டால், அதை நியாயமான விசாரணை செய்து தீர்வை பெற்றுக்கொடுக்கின்ற பெரும் பொறுப்பு கட்சி தலைமைக்கே உரியது. அதை விடுத்து உறுப்பினர்கள் நீங்களே பேசித்தீர்த்து சமரசம் செய்து கொள்ளுங்கள் என்று நீங்கள் உட்பட மத்தியஸ்தம் வகித்தவர்களும் கூறுவது வேடிக்கையானது.

இந்த விவகாரம் தொடர்பில், அறங்காவல் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியும், நேரில் அத்தீர்மானத்தை உங்களிடம் கையளித்தும் அதை நீங்கள் ஒரு பொருட்டாகவே கருதிக்கொள்ளவில்லை. ஆனால் ஜனநாயக பண்புநெறிகளிலிருந்து மக்களாகிய நாம் ஒருபோதும் வழுவ மாட்டோம். மக்கள் மனங்களில் நிறைந்தவர் யார்? மக்கள் மனங்களை வென்றவர் யார்? என்பதை காரைதீவு மக்களாகிய நாம், இனிவரும் தேர்தல்களிலும் உணர்த்துவோம். அறிவிப்போம். ஜனநாயகம் எமக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கும். தமிழ் தேசியத்தின் வழி நின்று எமக்கான அரசியல் பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்வோம்.

-காரைதீவு அறங்காவல் ஒன்றியம்-
தொடர்புகளுக்கு:
எஸ்.விஜயரெட்ணம்,
செயலாளர்,
காரைதீவு அறங்காவல் ஒன்றியம்.
காரைதீவு.

No comments:

Post a Comment