August 28, 2014

போர்க்குற்றவாளி- இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது! தி.வேல்முருகன்!

இலங்கைத் தீவில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இனப்படுகொலையாளன், சர்வதேசத்தின் முன் போர்க்குற்றவாளியாக நிற்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அனுமதித்திருப்பது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழீழத்தின் மீது இலங்கை பேரினவாத அரசு நிகழ்த்திய இனப்படுகொலை யுத்தத்தின் போது சர்வதேச சட்டங்கள் அத்தனையையும் மீறி தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தது ராஜபக்சே அரசுதான்! பள்ளிக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் இலக்கு வைத்து ரசாயன ஆயுதங்களை ஏவியது ராஜபக்சே அரசுதான்!

சரணடைந்த தமிழீழ மக்களின் பிரதிநிதிகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து எரித்ததும் ராஜபக்சேவின் சிங்களனப் பேரினவாத அரசு! இசைப்பிரியா உள்ளிட்ட பல்லாயிரம் தமிழ்ப்பெண்களைப் பலாத்காரம் செய்து ஒட்டுமொத்த சர்வதேசத்தையே அதிர வைத்தவனும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ராணுவமே! பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட பல்லாயிரம் பிஞ்சுகளை துப்பாக்கிக் தோட்டாக்களால் வீழ்த்தி வெறியாட்டம் போட்டதும் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற இருக்கிற கொடியவன் ராஜபக்சே கும்பல்தான்!

ராஜபக்சேவின் இத்தனை போர்க்குற்றங்களையும் கண்டு அதிர்ந்து போனதாலேயே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை பேரினவாத அரசின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்துள்ளது.

ஆனால் போர்க்குற்றவாளி ராஜபக்சேவோ, உலக நாடுகளின் உச்ச மன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவையே இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கிமூன் கேட்டுக் கொண்ட பின்னரும், ஐ.நா. குழுவை அனுமதிக்கவே முடியாது என்று கொக்கரிக்கிறது ராஜபக்சே கும்பல்!

இத்தகைய ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை சர்வதேசத்திலிருந்து முற்று முழுதாக தனிமைப்படுத்த வேண்டியதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பணியாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக செப்டம்பர் 25-ந் தேதியன்று நடைபெற உள்ள ஐ.நா. ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் முன்னுரிமை கொடுத்து ராஜபக்சேவை உரையாற்ற அனுமதித்திருப்பது உலகத் தமிழர்களை பெரும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இப்படி ராஜபக்சேவுக்கு முன்னுரிமை கொடுத்த உரையாற்ற அனுமதித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் அத்தனை கோடி தமிழர்களையும் ஐ.நா. சபை அவமதித்து உதாசீனம் செய்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே போன்ற போர்க்குற்றவாளிகளை ஐ.நா. சபையில் உரையாற்ற அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத்தின் மீது தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த எச்ச சொச்ச நம்பிக்கைகளும் மரணித்துப் போகிறது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகையால் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை ஐ.நா. சபையில் உரையாற்ற அனுமதிக்கவே கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்திய மத்திய பேரரசும் ராஜபக்சேவை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை ஐ.நா. சபையில் பேச அனுமதிக்கக் கூடாது என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை பேரியக்கங்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கையை கூட்டாக ஒன்றிணைந்து மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment