இலங்கையில் இருந்து கொண்டு இராணுவத்திற்கு எதிராக எவரேனும் சர்வதேசத்திடம் சாட்சியமளிப்பார்களாயின் அவர்களை உடனடியாக கைது செய்ய
வேண்டும் என தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சர்வதேச விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிப்பதாக கூறும் மங்கள சமரவீர மாவை சேனாதிராஜா ஆகியோரை அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா. குழுவினரிடம் சாட்சியமளிப்போம் என தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தற்போது முடிவிற்கு கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகளையும் கடந்து விட்டது. தற்போது வடக்கில் அமைதி நிலவுகின்றது. தமிழ், சிங்கள மக்களிடையே முரண்பாடுகள் இல்லாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரிவினை வாதக்கட்சிகள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தினை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையில் இடம்பெறாத யுத்த குற்றங்கள் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி சர்வதேசத்திடம் வழங்குவது தேசத்துரோக செயற்பாடுகளே. அதை சாதாரண பொதுமக்கள் செய்தாலுமோ அல்லது அரசியல் தலைவர்கள் செய்தாலுமோ அது தேசத்துரோக செயற்பாடாகவே அமையும். இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தம் பக்க சாட்சியங்கள் பலவற்றை சர்வதேசத்திடம் வழங்கி வருகின்றனர்.
அதே பாதையினை தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. தமது தேவைகளுக்காகவும் சர்வதேசத்தின் பணத்திற்காகவும் நாட்டைசீரழிக்க முயற்சிக்கும் மாவை சேனாதிராஜா, மங்கள சமரவீர ஆகியோரை அரசாங்கம் உடனடியாக கைது செய்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment