August 2, 2014

"என் உயிரே போனாலும் தமிழீழ கோரிக்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது" என்று கூறிய தேசியத்தலைவரை, யாழ்ப்பாணத்தில் வைத்து தூக்கிலிட சதித்திட்டம் தீட்டியிருந்தவர் அன்றைய சிங்கள அரசின் அதிபர் ஜெயவர்த்தனா!


1987ஆம் ஆண்டு ராஜிவ் காலத்தில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு
வகித்த, நட்வர்சிங் 410பக்கங்கள் கொண்ட தமது சுயசரிதை புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் ராஜிவ்காந்தி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
1986ஆம் ஆண்டு பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கை அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கலந்துகொண்டார். “அப்போது ரகசியமாக வேலுப்பிள்ளை பிரபாகரனையும் நாங்கள் பெங்களூர் வரவழைத்திருந்தோம்.”
பெங்களூரில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்ததனை எப்படியோ ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தெரிந்துகொண்டார். அதனால் ராஜிவ்காந்தியிடம் வேலுப்பிள்ளை பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பாவை கொன்றவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அதனால் அவரை ஒப்படைத்தால்தான் யாழ்ப்பாணத்தில் அவரைத் தூக்கிலிடமுடியும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வலியுறுத்தினார். ஆனால் ராஜிவ்காந்தி அன்று அதை நிராகரித்துவிட்டார்.
ராஜிவ்காந்தியைப் பொறுத்தவரையில் இலங்கை இனப்பிரச்சனை குறித்த புரிதல் இல்லை. பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தது போல இலங்கை பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியும் என்று நம்பினார். ஏதோ சில காரணங்களுக்காக இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவாக தீர்வுகாண ராஜிவ்காந்தி விரும்பினார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசினேன். தமிழீழக் கோரிக்கையை விட்டுக்கொடுக்கவேண்டும் என கோரியிருந்தேன். இல்லாவிடின் இந்திய, இலங்கை ராணுவங்களை விடுதலைப் புலிகள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்தேன். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரனோ, "என் உயிரே போனாலும் தமிழீழ கோரிக்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது" என்று உறுதியாகக் கூறினார்.
இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதை அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ் விரும்பவில்லை. அவரைப் பொறுத்தவரையில் பிரதமர் ராஜிவ் நேரடியாக இதில் தலையிட்டிருக்க வேண்டாம் என்பதுதான் கருத்தாக இருந்தது. இவ்வாறு நட்வர்சிங் தமது சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment