இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில்,
பிரசித்தி பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா மணிக்கு மன்னார் மறைமாவட்ட
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை,
காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு
நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட
இத்தாலியன் ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளாக மடுவிற்கு வருகைதந்திருந்த
அருட்பணியாளர்கள் மென்சின்நோர் லேனாட் டீ முருகோ, மொன்டினியோ அன்ரனியோ
அமராத்தி ஆகிய அடிகளாருடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும்
திருவிழா திருப்பலியில் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவின் போது மன்னார் மறை
மாவட்ட ஆயர் மறை மாவட்ட மக்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கும் பரிசுத்த
கத்தோலிக்க அப்போஸ்தலிக அன்னையின் பரிந்துரையை வேண்டி வழங்கும் ஆசியுரையை
திருச்சபையின் தாய் மொழியாம் இலத்தீனில் மொழிந்தார். இத்திருவிழா
திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதன் பின்
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் திருச்சுரூப ஆசிரும் அங்கு
குழுமியிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு
போக்குவரத்து, உணவு, குடிதண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், நீதிமன்ற ஒழுங்கு
போன்ற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருச்சுருப ஆசீர்
நிறைவுற்றதும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர்
இராயப்பு ஜோசப் ஆண்டகையும் இலங்கைக்கு வருகைதரவிருக்கும் பரிசுத்த
பாப்பரசரின் கொழும்பு, மடு ஆகிய விஜயங்களின்போது நடைபெறவிருக்கும்
நிகழ்வுகளை பற்றி கூடியிருந்த மக்களுக்குத் தெரிவித்தனர். இவ்விழாவுக்கு
இம்முறை நாட்டின் பலபாகங்களிலுமிருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள்
கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சுமார் 6 லட்சத்திற்கும்
மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என மடு பரிபாலகர் வட்டம் தெரிவித்தது.
No comments:
Post a Comment