பிரிந்துசென்ற கணவனை மந்திரசக்தி மூலம் மீண்டும் சேர்த்துவிடுவதாகக் கூறி அதற்குக் காணிக்கையாக அவரின் மனைவியிடம் ‘ஐ போன்’ கேட்டு மோசடியில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும்
இந்திய மந்திரவாதிகள் இருவரை மோதரைப் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்துள்ளனர். இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கங்காதரன் ருக்மணி, பீமாந்தா ஹரின் ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மேலும் எவ்வாறான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தேடியறியும் பொருட்டு மோதரைப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட் பாஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த மோதரைப் பொலிஸார், இவ்வாறான மோசடிக்காரர்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கை வந்து சினிமாப் பாணியில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த மோசடிப் பொறிக்குள் நாட்டின் இதர பகுதி மக்களும் சிக்கியுள்ளனரா என்பது பற்றி பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
மேற்படி மந்திரவாதிகளால் ஏமாற்றப்பட்டுள்ள பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை விவரித்துள்ளார். பெயரைக் குறிப்பிடுவதற்கு மறுத்த அவர், தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டார். தயவு செய்து ஊடகங்களில் தனது படத்தைப் பிரசுரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் கண்ணீர் மல்க விவரிக்க ஆரம்பித்தார். “எனது கணவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். நான் கிறிஸ்தவப் பெண். காதல் திருமணத்தினூடாகவே நாம் இணைந்தோம். எவ்வித சண்டை – சச்சரவுமின்றி இருவரும் மகிழ்வாக வாழ்ந்து வந்தோம்.
இவ்வாறான நிலையில், எனது கணவர் திடீரென என்மீது கோபப்பட்டு வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். யாரோ சூனியம் வைத்ததால்தான் எனது கணவருக்கு இவ்வாறு நடந்துள்ளது எனக் கருதினேன். எனவே, இந்த சூனியத்தை இல்லாது செய்து, அவரைப்பிடித்துள்ள காத்துக்கறுப்பு நீங்கவேண்டு எனத் தினமும் நான் பிரார்த்தனை நடத்தினேன். பல இடங்களுக்குச் சென்று ஜோதிடர்கள், மந்திரவாதிகளையும் சந்தித்துள்ளேன்.
அந்த வகையில் ஒருநாள் எனக்கு கையேடு ஒன்று வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்துள்ள பிரசித்திபெற்ற ஜோதிட சாஸ்திரிகள் மூலம் விசேட நன்மை பெறவும் என அதில் குறிப்பிடப்பட்டு பல நாடுகளுக்கு அவர்கள் சென்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி மட்டக்குளிய பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நான் சென்றேன். அங்கு இருந்த இருவரும் (ஆண், பெண்) தம்மை ஜோதிடர்கள் எனவும், மந்திரவாதிகள் எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான் நடந்தவற்றை அவர்களிடம் கூறியபின்னர் மஞ்சள் தடவப்பட்ட கொப்பி ஒன்றை என்னிடம் கொடுத்தனர். அதில் நான் எனக்குத் தேவையான விடயத்தை எழுதினேன்.
அதன் பின்னர் பரிகாரப் பூஜை நடத்துவதற்கு எனது ஆடைத்துண்டு, தேசிக்காய், சூடம், பத்தி போன்றவற்றை எடுத்து வருமாறு கூறினர். மறுநாள் அவற்றை நான் எடுத்துச் சென்றேன். அப்போது என்னிடம் யாகம் செய்வதற்காக 6ஆயிரத்து 300 ரூபா பணம் கேட்டனர். என்னிடம் அத்தொகை இல்லாததால் ரூபா 2,000 கொடுத்தேன்.
அதை வாங்கிக் கொண்டு திடீரென அவ்விடத்தில் புகையை கிளம்பச் செய்தனர். அவ்வாறு செய்துவிட்டு எனது கைப்பையிலிருந்த பொருட்களை கீழே கொட்டினர். அதிலிருந்த ‘ஐபோனும்’ கீழே விழுந்தது. விலையுயர்ந்த இந்த போனை வெளிநாட்டிலிருந்து எனது உறவினர் ஒருவர் அனுப்பிவைத்தார். திடீரென அந்த போனுக்கு மந்திர நூலைச் சுற்றி விட்டு குறித்த தொலைபேசியில்தான் திஷ்டி இருப்பதாகவும், இதனால் விசேட பூஜை நடத்தவேண்டியுள்ளதாகவும் என்னிடம் கூறி அதை எடுத்துக் கொண்டனர்.
மறுநாள் நான் சென்று தொலைபேசியைக் கேட்டதும் எதுவும் பேசாது காலத்தை இழத்தடித்த அவர்கள், “தொலைபேசியை எரித்து சாம்பலாக்கி எனது கணவனின் வயிற்றுக்கு அனுப்பியிருப்பதாகவும், இனிமேல் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் கூறினர். இதனால் சந்தேக மடைந்த நான் இதுபற்றி மோதரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்” என்று கூறினார் பாதிக்கப்பட்ட கிராண்டபாஸ் பகுதியைச் சேர்ந்த பெண். அதேவேளை, தங்களை ஜோதிடர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும் இருவரிடமும் இதுபற்றி வினவியபோது, தங்களை அக்கா, தம்பி என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் மழுப்பல் போக்கில் பதிலளித்தனர்.
இவர்களின் சுற்றுலா விசா இன்றுடன் நிறைவடைகிறது. இருவரும் நேற்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைய டுத்து எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மோதரை பொலிஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி(எம்.ஓ. பிரிவு)தலைமையிலான குழுவினரே இவர்களைக் கைதுசெய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment