இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய
வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் இன்று மீன்வளத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளனர்.
இந்தியக் கடல் எல்லை கோடியக்கரை பகுதியில் இரு நாட்டுப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை நேற்றைய தினம் கைது செய்துள்ளது.
இவர்கள் 11 பேரையும் அவர்கள் சென்ற இரு நாட்டுப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் செய்ய சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அலுவலகத்தில் ஆட்சியர் இல்லாததால் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெகன்னாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஐ.டி.யூ.பிரிவின் மாவட்ட செயலாளர் எம்.கருணா மூர்த்தி கூறியதாவது,
இலங்கை கடற்படை நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 5 படகுகளில் சென்ற 39 பேரையும்,ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த இரு படகுகளில் சென்ற 11 பேரையும் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்களும் தடை செய்யப்பட்ட எந்த வலைகளையும் பயன்படுத்தாமல் நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள்.
இவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.பிடிபட்டுள்ள 11 மீனவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த கவலையில் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினரில் வருமானம் ஈட்டுவதற்கு வேறு யாரும் இல்லை என்பதால் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள இரு நாட்டுப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்,பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்களில் ஒரு மீனவரின் தாயார் மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யவில்லையெனில் தீக்குளி்த்து விடுவதாக அறிவித்திருப்பதாகவும் எம்.கருணாமூர்த்தி தெரிவித்தார்.


No comments:
Post a Comment