July 28, 2014

நல்லூர் ஆலயத்திற்குள் காவல்துறையினர் மேலங்கியுடன் செல்ல தடை!

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா உற்சவ காலங்களில் அடியவர்களுக்கு
ஏற்படுகின்ற அசெளகரியங்கள் மற்றும் திருட்டுக்களைத் தடுப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறையினர் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதற்கு இம் முறை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தள்ளார்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத் திருவிழா இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் கால முன்னேற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கூட்டம் மாநகர சபையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதன் போது திருவிழாக் காலங்களில் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்கள் குறிப்பாக பெண்கள் - கலாசார உடைகளை அணிவதன் அவசியம் குறித்தே பலராலும் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு விசேட உற்சவ தினங்களின் போது அடியவர்களுக்கு ஏற்படுகின்ற அசெளகரியங்களைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும் ஆலயச் சுழலிலும் ஆலயத்தை அண்மித்த பிரதேசங்களிலும் இடம்பெறுகின்ற திருட்டுக்களைத் தடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. அடியவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் இம்முறை கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனப் பிரதிப் காவல்துறை மா அதிபர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார் என மாநகர முதல்வர் தெரிவித்தார்.
உற்சவ காலத்தின் விசேட தினங்களில் ஆலயத்திற்குள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறையினர் மேலங்கியுடன் கடந்த முறை ஈடுபட்டனர் எனவும் இதற்குப் பலரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலங்கியுடன் காவல்துறை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment