கணவனை கொலை செய்து எரித்த வழக்கில் மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
காதல் திருமணம்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஏமாகண்டனூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் சசிக்குமார் (வயது 31). தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ,அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகள் வனிதா (29) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணமாகும். இவர்களுக்கு சுருதி (11), அபிஸ் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
வனிதாவின் உறவினர் கட்டையன் என்பவருடைய மகன் செந்தில்குமார் (28). இவருக்கும், வனிதாவுக்கும் திருமணத்துக்கு முன்பே பழக்கம் இருந்தது.
கள்ளக்காதல்
ஆனால் திருமணத்துக்கு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் செந்தில்குமாருக்கு திருமணம் நடந்தது. அவருக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகும் செந்தில்குமாருக்கும், வனிதாவுக்கும் தொடர்பு நீடித்தது. இது சசிக்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 16-3-2012 அன்று இரவு சசிக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்து மதுக்குடித்த அவர் பின்னர் போதையில் தூங்கி விட்டார்.
கணவர் கொலை
அவர் தூங்கியதும், வனிதா போன் செய்து செந்தில்குமாரை வீட்டுக்கு வரவழைத்தார். அவர் வந்தபோது சசிக்குமார் தூக்கம் கலைந்து எழும்பினார். அதில் தகராறு ஏற்பட்டது. உடனடியாக வனிதாவும், செந்தில்குமாரும் சேர்ந்து வனிதாவின் சேலையால் சசிக்குமாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் வனிதாவின் தந்தை முருகேசன் உதவியுடன் சசிக்குமாரின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து தடயங்களை மறைத்தனர்.
இந்தநிலையில் சில நாட்களாக சசிக்குமாரை காணாததால் சந்தேகம் அடைந்த அவருடைய தாயார் பாப்பாத்தி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, வனிதாவும், செந்தில்குமாரும் ஊரில் இருந்து தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய புலன்விசாரணையில் அவர்கள் 2 பேரும் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
போலீசார் தேடுவதை அறிந்த 2 பேரும் கொடுமுடி கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து வனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஈரோடு 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி டி.பாலகிருஷ்ணன் விசாரித்தார். அவர் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், சசிக்குமாரை கொலை செய்த குற்றத்துக்காக அவருடைய மனைவி வனிதா, கள்ளக்காதலன் செந்தில்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பிணத்தை எரித்து தடயங்களை மறைத்த குற்றத்துக்காக தலா 3 ஆண்டு ஜெயில் மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவில் கூறி இருந்தார். மேலும், பிணத்தை எரித்து தடயங்களை மறைக்க உதவியாக இருந்த வனிதாவின் தந்தை முருகேசனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சசிக்குமாரின் மகள் சுருதி சேர்க்கப்பட்டு இருந்தார். அவளுடைய சாட்சிதான் வனிதா மற்றும் செந்தில்குமாரின் குற்றங்களை வெளியே கொண்டுவரவும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முக்கிய சாட்சியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் துரைசக்திவேல் ஆஜர் ஆனார்.



No comments:
Post a Comment