July 24, 2014

சுப்பிரமணியன் சாமியை கைது செய்ய வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை!

அண்மையில் சிறீலங்கா சென்ற பாஜக குழுவிற்கு சுப்பிரமணியசாமி தலைமை தாங்கி மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசி உள்ளார். ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்
அடிப்படையில் சுப்பிரமணிய சாமி தமிழகத்தை பற்றி கவலைப் படவேண்டாம், இந்திய அரசு சிறீலங்கா அரசுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவை தரும் என்று உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
தமிழர் தரப்பில் இருந்து ஒருவர் கூட சிறீலங்காவிற்கு செல்லாத நிலையில் பாஜக குழு சிறீலங்கா சென்றுள்ளது. இந்த குழுவிற்கு ஏன் சுப்பிரமணிய சாமி தலைமை தாங்கினார் என்பது தெரியவில்லை . சுப்பிரமணிய சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் அல்ல , இவர் அரசு அதிகாரியும் அல்ல. அப்படி இருக்கும் போது இவரை அரசு சார்பில் எப்படி இலங்கைக்கு அனுப்ப முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
மேலும் சிறீலங்கா சென்று ராஜபக்சேவிடம் தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் , இந்திய அரசு சிறீலங்காவின் போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையில் சிறீலங்காவிற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இது தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்திற்கும், தமிழக அரசின் இறையாண்மைக்கும் எதிரான நிலைப்பாடாகும். இந்திய ஒன்றியத்தில் தான் இன்றுவரை தமிழகம் உள்ளது. அப்படி உள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசின் தீர்மானத்திற்கும் எதிராக சுப்பிரமணிய சாமி பேசியுள்ளது தமிழக அரசின் இறையாண்மைக்கு எதிரான செயலாக கடுதப்படுகிறது.
இறையாண்மை என்பது இந்திய அரசுக்கு மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும் இருக்கிறது என்பதை சுப்பிரமணிய சாமி உணராமல் தமிழர்களுக்கு எதிராக இப்படி பேசியுள்ளார். மேலும் அவருடைய சமூக வலைத்தளங்கள், ட்விட்டர் பக்கங்களில் தமிழர்களை பொறுக்கிகள் என்றும் , தமிழீழ விடுதலைப் போராளிகளை எலிகள் என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அரசியலைக் கடந்து இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுடன் இவர் நெருக்கமாக உள்ளார் என்றும் தெரிகிறது.
தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை சிறீலங்காவுடன் உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய நிலையில், சுப்பிரமணிய சாமி இலங்கையுடன் நல்லுறவை பேணவே இந்திய அரசு விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கும் , தமிழக தமிழர்களுக்கும் எதிராகவே செயல்படும் சுப்பிரமணிய சாமியை பாஜக தங்கள் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி எப்படி தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டதோ அவ்வாறே பாஜகவும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம் .
தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழர் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படும் சுப்ரமணிய சாமியை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
நன்றி 
இராஜ்குமார் பழனிசாமி 
செய்தித் தொடர்பாளர் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ்நாடு)

No comments:

Post a Comment