June 13, 2014

‘ஒப்ரேசன் ஆஷ்போர்ட்’ புலிகளை வேரறுப்பதற்கு வகுக்கப்பட்ட வியூகம் - சேரமான்

ஜேக்கப் சூமா அவர்களை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழுவினர் சந்திக்கும் வரை
அவரை பற்றி நல்லதொரு அபிப்பிராயத்தையே புலிகள் இயக்கம் கொண்டிருந்தது. இதற்கு சூமாவின் போராட்ட வரலாறு ஓர் காரணமாகும். தனிப்பட்ட வாழ்க்கையில், அதுவும் பெண்கள் விடயத்தில், சர்ச்சைக்குரிய ஒருவராக சூமா அவர்கள் விளங்கினாலும், தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்தவரை நெல்சன் மண்டேலாவைப் போன்று இலட்சிய உறுதி மிக்கவராகவே விளங்கினார்.
தனது பதினேழாவது அகவையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்ட சூமா அவர்கள் அன்று முதல் தனது பூர்வீகப் பிரதேசத்தில் தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டப் பணிகளை முன்னின்று மேற்கொண்டவர். சக உறுப்பினர்களுடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேற்றுமை காரணமாக 1963ஆம் ஆண்டு ஆபிரிக்கத் தேசிய கொங்கிரசிலிருந்து விலகி தென்னாபிரிக்க கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்ட சூமா, அவ்வாண்டு தென்னாபிரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தென்னாபிரிக்காவின் அன்றைய வெள்ளையின அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ரொபென் தீவில் சிறைவைக்கப்பட்ட சூமா, அங்கிருந்த சக கைதியான மண்டேலாவின் நெருங்கிய நண்பராகினார்.
பத்தாண்டு சிறைவாசத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த சூமா, ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராகப் பரிணமித்தார். எனினும் வெள்ளையின ஆட்சியாளர்களின் கெடுபிடிகள் காரணமாக கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டப் பணிகளை தென்னாபிரிக்காவில் முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறிய சூமா அவர்கள், அயல் நாடுகளான சுவாசிலாண்ட், மொசாம்பிக், சம்பியா ஆகிய நாடுகளில் மாறி மாறித் தங்கியிருந்து இயக்கத் தளங்களை அமைத்து, ஆபிரிக்கத் தேசிய கொங்கிரசின் தலைமறைவு கெரில்லா கட்டமைப்புக்களை விரிவுபடுத்தினார். 1990ஆம் ஆண்டு சிறையிலிருந்து மண்டேலா அவர்கள் விடுவிக்கப்பட்ட பொழுது ஆபிரிக்கத் தேசிய கொங்கிரசின் அரசியற்பீட உறுப்பினராகவும், கட்சியின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் சூமா அவர்கள் உயர்ந்திருந்தார்.
இவ்வாறு தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஓர் அரசியற் போராளியாகவும், கெரில்லாப் போராளியாகவும், புலனாய்வுப் போராளியாகவும் பல் பரிமாணங்களை கொண்டவராக சூமா அவர்கள் மிளிர்ந்தமை, அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் சூமாவை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவரைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டிருந்த படிமக் கோட்டை மண்கோட்டையாக தகர்ந்து விழுந்து தவிடு பொடியாகியது. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழுவினரை சூமா அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார். கைலாகு கொடுத்தார். குசலம் விசாரித்தார். கடற்கோளால் காவு கொள்ளப்பட்ட தமிழீழ மக்களுக்கு தென்னாபிரிக்க மக்களினதும், அரசாங்கத்தினதும் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய பேச்சு எழுந்தது. அங்குதான் சிக்கலே தொடங்கியது: சூமாவின் சுயரூபமும் வெளிப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகளிலிருந்து 2003ஆம் ஆண்டு ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விலகிக் கொண்டது என்று சூமா விளக்கம் கேட்டார். போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டு மீண்டும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கும் எண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கின்றதா? என்று வினவினார். அதற்குப் பதிலளித்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், போர்நிறுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றுறுதி கொண்டிருப்பதோடு, இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டத்தின் அடிப்படையில் மீண்டும் சமரசப் பேச்சுக்களைத் தொடங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் சூமாவிடம் தெரிவித்தார்.
அப்படியென்றால் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதுதானே? என்று சூமா வினவினார். மீண்டும் அதற்கு பதிலளித்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதில் தமது இயக்கத்திற்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும், ஆனால் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் பேசுவதற்கான ஏற்பாடுகளைத் தாம் மேற்கொண்ட பொழுது, அதனை சாக்காக வைத்து விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைக் கலைத்த சந்திரிகா அம்மையார், பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் சமரச முயற்சிகளுக்கு எதிராகச் செயற்படும் இனவாதக் கட்சியான ஜே.வி.பி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் புதிய அரசாங்கத்தை உருவாக்கியதையும், பேச்சுவார்த்தை பற்றிய இணக்கப்பாடான கொள்கை இந்தக் கூட்டணி அரசாங்கத்திடம் இல்லை என்பதையும் எடுத்துரைத்தார்.
மேலும், தமிழீழ தாயகத்தில் கடற்கோளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சுனாமி பொதுக்கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தைக்கூட கைச்சாத்திடாது சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் இழுத்தடித்து வருவதையும், இதன் விளைவாக கடற்கோளால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் அல்லற்படுவதையும் சூமாவிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் எடுத்து விளக்கினார்.
இவற்றையெல்லாம் பொறுமையுடன் செவிமடுத்த சூமா, திடீரென போதிசத்துவராக மாறி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழுவினருக்கு பேச்சுவார்த்தைகளின் மகிமை பற்றிப் போதனை செய்யத் தொடங்கினார். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்றும், ஆனால் அதற்காகப் பேச்சுவார்த்தைகளுக்கான மாற்றீடாக ஆயுதப் போராட்டம் அமையப் போவதில்லை என்றும் சூமா உபதேசிக்கத் தொடங்கினார். ஆயுதப் போராட்டத்திலும், அரசியல் போராட்டத்திலும் ஈடுபட்ட அமைப்பு என்ற வகையில் இதுபற்றிய நீண்டகால அனுபவமும், படிப்பினையும் ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கு இருப்பதாகவும், ஈழத்தமிழர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், சனநாயக நீரோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இணைந்து கொள்வதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாகவும் பெரும் குண்டொன்றை சூமா தூக்கிப் போட்டார்.
சூமாவின் வாயிலிருந்து உதிர்ந்த போதிசத்துவ தத்துவ முத்துக்களை செவிமடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழுவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. தம்மைப் போன்று ஆயுதப் போராட்டத்தையும், சமகாலத்தில் அரசியல் போராட்டத்தையும் முன்னெடுத்து ஈற்றில் தமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்த ஓர் உரிமைப் போராட்ட இயக்கம் என்ற வகையில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்த நம்பிக்கை அவ்விடத்திலேயே தவிடு பொடியாகியது.
தமிழீழத் தனியரசுக்கு அங்கீகாரம் கோரி வன்னியிலிருந்து டேர்பன் வரை வந்த தம்மிடம் பேச்சுவார்த்தைகள் ஊடாக அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும், சனநாயக நீரோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சூமா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் ஐயம்திரிபு இன்றி ஒரு உண்மையைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தின. தமிழீழ மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமது தேச சுதந்திர இயக்கத்தை நிராயுதபாணியாக்கி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஏற்படுத்தப்படும் அரசியல் தீர்வொன்றை ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சியாக மாற்றியமைக்கும் மேற்குலகின் அதே சிந்தனைத் தளத்திலேயே தென்னாபிரிக்காவும், அதன் ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சியும் நிற்கின்றன என்பதுதான் அந்த மெய்யுண்மையாகும்.
இவ்வாறு இராசதந்திர திரைக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சூமா போதிசத்துவ உபதேசம் செய்து கொண்டிருக்க, சூமாவை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழுவினர் சந்தித்ததையிட்டுப் சிறியதொரு அரசியற் சூறாவளி கொழும்பில் கிளம்பியிருந்தது.
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் குழுவினரை தென்னாபிரிக்காவின் துணை அதிபர் சந்திக்கும் வரை சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?’ என்று சிங்கள ஊடகங்கள் இனவெறியைக் கக்கின. சூமா - தமிழ்ச்செல்வன் சந்திப்பு நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் வெளிவந்த கொழும்பு சண்டே ரைம்ஸ் வார இதழ், ‘தோற்றுப் போன இராசதந்திரமும், ஏனைய நிகழ்வுகளும்’ என்ற மகுடத்தின் கீழ் சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தையும், நோர்வேயையும் கடுமையாகச் சாடிக் கட்டுரையன்றை வெளியிட்டது. வன்னிக்குள் முடங்கியிருந்த புலிகளை உலகெங்கும் ‘தவளைப் பாய்ச்சல்’ செய்வதற்கு சந்திரிகா இடமளிப்பதாகக் குற்றம் சுமத்தியது. அதிகாரப் பகிர்வு, சனநாயக ஆட்சி ஆகியவை பற்றிய படிப்பினைகளை வழங்குவதாக நியாயம் கற்பித்து வெளிநாடுகளில் சுதந்திரமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு நோர்வே இடமளித்து சுயலாபம் ஈட்டுவதாகக் கண்டனம் வெளியிட்டது.
அக்கட்டுரை தென்னாபிரிக்க அரசாங்கத்தையும், ஆபிரிக்க தேசிய காங்கிரசையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளையின நிறவெறிக்கு எதிராகவும், தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்காகவும் ஆதரவுக் குரலெழுப்பிய சிறீலங்கா அரசுக்கான நன்றிக்கடனை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் செலுத்தத் தவறியிருப்பதாக குற்றம் சுமத்தியது. அம்னீசியா எனப்படும் ஞாபக மறதி நோயால் ஆபிரிக்க காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியை சண்டே ரைம்ஸ் திட்டித் தீர்த்தது.
ஆனால் இதனையிட்டு சந்திரிகா அம்மையாரோ, நோர்வேயோ, அன்றி தென்னாபிரிக்காவே அலட்டிக் கொள்ளவில்லை. தமிழீழத் தனியரசு நிறுவப்படுவதை தென்னாபிரிக்க அங்கீகரிக்காது என்பதையும், ஆயுதப் போராட்ட இயக்கம் என்ற நிலையில் இருந்து ஓர் அரசியல் கட்சி என்ற நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பரிணமிப்பதையே தென்னாபிரிக்கா விரும்புகின்றது என்ற செய்தியையும் சூமா ஊடாகப் பூடகமாகத் தெரிவித்த மகிழ்ச்சி அவர்களுக்கு.
இது பற்றி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான அரசியல் குழுவினர் வன்னி திரும்பிய பின்னர் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் மீது அனுதாபம் கொண்ட நோர்வே அதிகாரி ஒருவரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தரங்க செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
இங்கு இன்னொரு விடயத்தை நாம் குறிப்பிட வேண்டும். 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் நாளன்று அன்றைய சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் லக்க்ஷ்மன் கதிர்காமர் குறிசூட்டுத் தாக்குதலாளி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது அதனைத் தென்னாபிரிக்காவும் கண்டித்தது. இது பற்றி 13.08.2005 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்போதைய தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி என்கொசாஸ்னா டிலாமினி சூமா, சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் நோக்கத்துடனேயே கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கடும்போக்குவாதிகளின் ஆதிக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இடமளிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு தென்னாபிரிக்கா பற்றிய தெளிவான புரிதலை 2005ஆம் ஆண்டிலேயே கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமான ரூட் ரவி அவர்கள் அனுப்பிய தென்னாபிரிக்கத் தூதுச் செய்தியால் மெய்மறந்து போய்விடவில்லை.
(தொடரும்)  
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment