June 8, 2014

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன்!- எரிக் சொல்ஹெய்ம்



போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிலோன் ருடே  என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் குறிப்பிட்டதாவது,
இலங்கையில் நடைபெற்ற  மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயமும், சாட்சியமளிக்க கேட்டால், அதனை வழங்கத் தயாராகவே இருக்கிறேன்.
2009 மே 17ம் நாள், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளான, புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரிடமிருந்து தாம் சரணடைய வேண்டும் என்று நோர்வேஜியர்களுக்கும், ஏனையோருக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
எதையும் செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டதென்று நாம் அவர்களுக்கு கூறினோம்.
எனினும், வெள்ளைக்கொடியை உயர்த்திக் கொண்டு செல்லும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.
மே 18ம் நாள் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக எமக்குத் தகவல் கிடைத்தது.

இலங்கையில் இடம்பெற்ற போர் மிகப்பெரிய விலை கொடுத்தே வெற்றி கொள்ளப்பட்டது.
இலங்கையை  விசாரிக்கும் எந்தவொரு அனைத்துலக அங்கீகாரம் பெற்ற தீர்ப்பாயத்தின் முன்பாகவும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறேன்.
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவினாலும், அமெரிக்காவினாலும் வேறு பல இடங்களில் இருந்தும் என்னிடம் கேட்டார்கள்.
போரில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அது மிகப் பெரிய விலை.
இராணுவ நடவடிக்கையில்லாமல், அமைதிப் பேச்சுக்களின் மூலம் போருக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.
2015 க்கு முன் வெளிவரவுள்ள எனது நூலில் நான் பொறுப்பேற்றதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து விடயங்களையும், விடுதலைப் புலிகளினதும், மிக முக்கியமாக இலங்கை அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் வெளியிடவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment