May 7, 2014

புத்திசாலிகளின் 'போங்கு' ஆட்டம் - புகழேந்தி தங்கராஜ் !

வன்னி மண்ணிலிருந்து வருகிற செய்திகள் ஒருபக்கம் மகிழ்ச்சி அளித்தாலும்
இன்னொரு பக்கம் அதிர்ச்சி அளிக்கின்றன. சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் ராஜபக்சேவின் பேனர்கள் தீக்கிரையாக்கப்படுவது, வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நம் பலமாகிறது. அதே சமயம், இன அழிப்பு - என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் சமந்தகர்களைப் பார்க்கும்போது, துரோகம் முற்றிலுமாகத் தொலைந்துவிடவில்லை என்கிற யதார்த்தமும் சேர்ந்து அம்பலமாகிறது.
ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை -
இருதரப்புப் போர் என்று அதைச் சித்தரிப்பது உண்மையைத் திரிப்பது -
அது ஓர் இயக்கத்தை அழிப்பதற்கான தாக்குதல் அல்ல, ஓர் இனத்தை அழிக்கத் தொடுக்கப்பட்ட போர் -
கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம்பேரும் அப்பாவிப் பொதுமக்கள் -
சிதைக்கப்பட்ட ஆயிரமாயிரம் சகோதரிகள் நிர்க்கதியாக நின்ற நிரபராதிகள் -
இதைத்தான் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்று ஈழமண்ணின் வலியையும் வேதனையையும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கும் உலக நாடுகள் அனைத்துமே, இனப்படுகொலை நடந்துகொன்டிருந்தபோது அதை அறிந்தோ அறியாமலோ நெட்டை மரங்களென நின்று கொண்டிருந்தவர்கள்தான். செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக ஒரு துரும்பையாவது தூக்கி வைத்துவிடவேண்டும் என்று இன்று நினைக்கிறார்கள் அவர்கள்.
ஒன்றரை லட்சம் உறவுகளின் ரத்தத்தால் சுத்திகரிக்கப் பட்டிருக்கும் வன்னி மண்ணில் இன்றைக்கு நிலவுகிற ஒரே நம்பிக்கை, சர்வதேசத்தின் மனமாற்றம் தான். கொல்லப்பட்ட தங்கள் சொந்தங்களுக்கும், சிதைக்கப்பட்ட தங்கள் அக்கா தங்கைகளுக்கும் நிச்சயமாக நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை உருக்குலைந்து போன வன்னி மண்ணில் உருவாக்கியிருப்பவர், நவநீதம் பிள்ளை என்கிற உறுதி குலையாத இரும்புப் பெண்மணி. அந்த இரும்பு மனுஷியின் விடாப்பிடியான முயற்சிகளால், மலைப்பாம்பு போல சுருண்டு கிடந்த சர்வதேசம் இப்போதுதான் அசைந்து கொடுத்திருகிறது. இதுவே இறுதித் தீர்வு அல்ல - என்பது நம் ஒவ்வொருவருக்கும் புரிகிறது. ஆனால், நிச்சயமாக இது ஒரு தொடக்கம்.
மார்ச் மாதம், ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது ஒரு நீர்த்துப்போன தீர்மானம் தான். ஆனால், அதைப்பார்த்தே மிரளுகிறது இலங்கை.
இலங்கைக்குள் நுழைந்து விசாரிக்க யாரையும் அனுமதிக்க முடியாது, அப்படியே விசாரித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்க முடியாது, அப்படி யாராவது சாட்சியம் அளித்தால் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது, விசாரிக்க வருபவர்கள் அவ்வளவு சுலபத்தில் திரும்பிப் போய்விட முடியாது - என்று லோக்கல் ரவுடி ரேஞ்சுக்கு எகிறுகிறது இலங்கை. ஜெனிவாவில் கேட்டது மணியோசை தான். என்றாலும், பின்னாலேயே யானை வந்துவிடும் என்று அஞ்சுவதால்தான் இப்படியெல்லாம் லந்து செய்கிறது மகிந்த மிருகம்.
தங்கள் இனத்தை அழித்த ஒரு மிருகம் இப்படியெல்லாம் நடுங்குவதைப் பார்த்து - வன்னித் தலக்கட்டுகள் மகிழ்ந்திருக்க வேண்டும். எதிரி நடுங்கும் நிலையில், உருவாகியுள்ள இந்தப் புதிய சூழலை மேலதிக சாதகமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கவேண்டும். அதை அவர்கள் செய்தார்களா - என்பது முதல் கேள்வி. அதைச் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள் - என்பது இரண்டாவது கேள்வி.
எடுத்த எடுப்பிலேயே ஒரு தன்னிலை விளக்கத்தை உங்கள் முன் வைத்துவிடுகிறேன். நான் மட்டக்களப்பில் பிறந்தவன் என்று, விவரம் தெரியாத யாரோ முகநூலில் எழுதியது என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, உண்மைக்கு மாறாக எழுதியிருக்கிறார்களே என்று நான் வருந்தவில்லை. மாறாக, அது எனக்குத் தரப்பட்டிருக்கும் அங்கீகாரம் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன். முகநூல் நண்பர்கள் யாரோ, நான் திருச்செந்தூர் அருகில் ஒரு பனைமரக்காட்டில் பிறந்தவன் என்கிற உண்மையைப் பதிவு செய்தபிறகே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
ஈழம் - என்கிற ஒரு வீரஞ்செறிந்த மண்ணின் மீதான காதல் தான் என்னை எழுத வைக்கிறது, இயக்க வைக்கிறது, இயங்க வைக்கிறது. அந்த வணங்கா மண்ணையும், அந்த மண்ணை நிமிரவைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனையும் உங்களைப் போலவே நானும் பெருமையோடு என் அடையாளமாக ஏற்றவன். என்றாலும், அந்த மண்ணின் நடப்பு அரசியலைப் பொறுத்தவரை, நாம் மூன்றாவது நபர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நீங்களோ நானோ, வன்னி மக்களின் உரிமைப் போரை ஆதரிக்கலாம்... அவர்கள் அரசியலை விமர்சிக்க முடியாது. அது நாகரீகமும் அல்ல. இங்கேயிருக்கிற அரசியல் மாதிரி அங்கே நடக்கிற அரசியல் அது. அதுகுறித்து இங்கே விவாதிப்பதில், இயல்பாகவே ஒரு நெருடல் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டுதான் இதை எழுதுகிறேன். சொந்த இன அழிப்புக்குத் துணைபோன துரோகத்தின் தொடர்ச்சி, அந்த இன அழிப்பை மூடிமறைக்கும் அளவுக்கு நீளத் தொடங்கிய பிறகும் இதை எழுதாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது. இப்படியொரு இக்கட்டான நிலையில்தான் எழுதத் துணிகிறேன் இதை!
ஒன்றரை லட்சம் உறவுகள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதைக் கண்ணெதிரில் பார்த்தவர்கள், வன்னியில் வாழ்கிற தமிழினத் தலைவர்கள். ஜெனிவா தீர்மானம் வெறும் மணியோசையோடு நின்றுவிடக் கூடாது, யானையும் பின்னாலேயே வந்துவிட வேண்டும், இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் காலில் போட்டு மிதிக்க வேண்டும் - என்று இந்தத் தலைவர்களில் எத்தனைப்பேர் விரும்புகிறார்கள்? நமக்குத் தெரியவில்லை.
நடந்தது இனப்படுகொலை - என்பதை மூடிமறைக்க மகிந்த மிருகம் முயலலாம்..... கோதபாய மிருகம் முயலலாம்.... பொன்சேகா மிருகம்கூட முயலலாம். நடந்த இனப்படுகொலையில் நேரடிப் பங்கு இருந்ததால், சிங்கள மிருகங்களுக்கு அதற்கான காரணம் இருக்கிறது. இனப்படுகொலையை மூடி மறைக்க வன்னித் தலைகளில் சிலவும் தொடர்ந்து முயல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நடந்த இனப்படுகொலையில் இவர்களுக்கு மறைமுகப் பங்கு இருந்ததா - என்கிற கேள்வி எழுமா எழாதா? ஒன்றரை லட்சம் உறவுகளைக் காப்பாற்ற முயலாத ஆட்டுத்தோல் ஓநாய்கள், ராஜபக்சேக்களைக் காப்பாற்ற மட்டும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வருவது ஏன்?
இப்படியெல்லாம் கேள்விகள் எழவும், இப்படியெல்லாம் சந்தேகங்கள் எழவும் காரணாகிவிட்டிருக்கின்றன மர்ம மனிதர்கள் சிலரின் நடவடிக்கைகள். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சர்வதேச நகர்வுகள் உச்சத்தில் இருந்தபோதே, அங்கேயிருக்கிற இலங்கைப் பிரதிநிதிகளோடு இந்த மர்ம மனிதர்கள் ஒட்டி உறவாடுவதாகச் செய்திகள் வெளியாகின. இன்றுவரை அந்த ஒட்டுதலுக்கும் உறவாடுதலுக்கும் என்ன காரணம் என்பதை அவர்கள் விளக்கவும் இல்லை.... விளக்கம் கொடுக்கும்படி அவர்களது தலைமைகள் கேட்கவுமில்லை.
ஜெனிவாவில் போய் உட்கார்ந்துகொண்டு இலங்கைக்கு ஏஜெண்ட் வேலை பார்த்தது ஏன் - என்று யாரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டுமோ அவர்களிடம் கேட்கவில்லை வன்னித் தலப்பாக்கட்டுகள். அதையே ஜீரணிக்க முடியவில்லை நம்மால்! இனப்படுகொலைக்கு நீதிகேட்க தனிமனுஷியாக ஜெனிவாவில் நின்று போராடிய சகோதரி அனந்தியிடம் மேற்படி தலப்பாக்கட்டுகள் விளக்கம் கேட்டால் எப்படி அதை மன்னிக்க முடியும்?
இனப்படுகொலையை மூடிமறைக்க முயலும் ராஜபக்சேக்களின் ஏஜெண்டுகளை ஊக்குவிப்பது, இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் முயற்சிகளை உருக்குலைப்பது - என்கிற கொள்கை முடிவு எதையாவது எடுத்திருந்தால், சம்பந்தன் வகையறாக்கள் அதை வெளிப்படையாகப் பிரகடனம் செய்துவிடுவது நல்லது. அதைச் செய்யத் தவறினால், ஈழத்துச் சகோதரிகளின் அடையாளமாகத் திகழும் அனந்தியைக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கடுமையாகச் சாட சுமந்திரன் என்கிற மாமேதையை அனுமதித்தது ஏன் என்பதையாவது தெளிவுபடுத்த வேண்டும்.
சுமந்திரன் என்பவர் சம்பந்தன் கோஷ்டியால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரு கொழும்புப் பிரமுகர். அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளை வாங்கிய தமிழினத்தின் நேரடிப் பிரதிநிதி. சுமந்திரன் என்பவர், காணாதுபோனவர்களுக்குக் குரல் கொடுக்கும் முயற்சிக்குத் தன்னை அர்ப்பணித்தவர் அல்ல. அனந்தி, காணாது போன கணவருக்காக மட்டுமில்லாமல், காணாதுபோன ஆயிரமாயிரம் உறவுகளுக்காகக் குரல்கொடுப்பவர், வீதியில் இறங்கிப் போராடுபவர்.
அடிப்படையிலேயே இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. எங்கள் உறவுகளின் நேரடி ஆதரவுடன் முன்வாசல் வழியாக வடமாகாண சபையில் நுழைந்தவர் - எங்கள் பெருமைக்குரிய சகோதரி அனந்தி. புழக்கடை வாயில் வழியாக அரங்குக்குள் நுழைந்திருப்பவர் சுமந்திரன்.
சுமந்திரன் என்பவர் மிகச் சிறந்த அறிவாளி, மேதை - என்றெல்லாம் யாராவது நினைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம்! தன்னுடைய அறிவை, தன் இனத்தைக் கொன்று குவித்த மிருகங்களைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப் பார்க்கும் ஒரு மனிதரை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கட்டி அழப் போகிறீர்கள்? அந்த வேதாளத்தை இன்னும் எத்தனை நாள் தூக்கிச் சுமக்கப் போகிறீர்கள்? சொல்லித் தொலையுங்கள்!
நடந்தது இனப்படுகொலை என்று தெரியுமாம்....
ஆனால் எடுத்த எடுப்பில் அப்படிச் சொல்வது ராஜதந்திரம் இல்லையாம்...
போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பேசி சர்வதேசத்தையும் சமாதானப்படுத்துவார்களாம்....
இவர்களுடைய நண்பன் ராஜபக்சேவையே கூட அதை ஏற்கவைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கச் செய்வார்களாம்....
அதற்குப் பிறகு நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து 'நடந்தது இனப்படுகொலைதான்' என்று அறிவிப்பார்களாம்....
புத்திசாலிகள் ஆடிக்கொண்டிருக்கிற போங்காட்டம் இதுதான். அடிமுட்டாள்கள் என்று நினைக்கிறார்களா நம்மை! தமிழினத்தின் முதுகில் குத்துகிற இந்த ஆட்டத்துக்கு, தமிழ் சினிமாவில் வருகிற குத்தாட்டம் எவ்வளவோ தேவலை!
கொக்குக்குத் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிப் போவார்களாம்...
கொக்குக்கு அருகே சென்றதும் அதன் தலையில் வெண்ணெய் வைப்பார்களாம்...
வெயிலில் வெண்ணெய் உருகி கொக்கின் கண்ணை மறைக்குமாம்.....
கொக்கின் கண்ணை வெண்ணெய் மறைத்ததும் லாவகமாக கொக்கைப் பிடித்துவிடுவார்களாம்....
அடேங்கப்பா - இதுவல்லவோ அறிவுடைமை, இதுவல்லவோ ராஜதந்திரம் என்று நாம் பாராட்ட வேண்டுமென்று சம்பந்தன் வகையறாக்கள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? கொக்கு தப்பித்துச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு, இப்படித்தான் பிடிக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிற எவரும், இலங்கை என்கிற பௌத்த சிங்கள பாசிசத் தேசத்தின் உப தேசங்களாக இருக்கட்டும்.... ஈழ தேசத்துக்குள் தப்பித் தவறி அவர்கள் தலைகாட்டிவிட வேண்டாம்.
'உன் மூளை முழுக்க சிந்தனை......
ஆனால் அந்த சிந்தனை முழுக்க வஞ்சனை'
என்கிற வசனம் ஏதோ ஒரு பழைய தமிழ்ப்படத்தில் வரும். வசனகர்த்தா - கருணாநிதி என்று ஞாபகம். (தன்னைப் பற்றி தானே எழுதிக் கொண்டாரோ என்னவோ!) யார் எழுதியது என்று சக்தி சாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்!
சுமந்திரன் என்கிற மாமேதையின் மூளை முழுக்க சிந்தனையே நிறைந்திருந்தாலும், அந்த சிந்தனை முழுக்க வஞ்சனை நிரம்பி வழிவதைப் பார்க்காமல், நசுக்கப்பட்ட எம் இனத்தின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்த மேதையின் கையில் ஒப்படைக்கும் பேதைகளாகவா மாறிவிட்டார்கள் தமிழினத் தலைவர்கள்?
சர்வதேசத்தை மருந்துக்குக் கூட மதிக்காமல், 'விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை' என்று மிரட்டுகிறது இலங்கை. அந்த இலங்கையையும் கூட்டு சேர்த்துக்கொண்டு விசாரணைப்பாதைக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சிப்பதுதான் முட்டாள்தனமே தவிர, சர்வதேசத்தின் கையைப்பிடித்துக் களத்தில் இறக்குவது அல்ல! சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இப்படியெல்லாம் நம்புபவர்கள் தங்கள் மூளைகளை எங்காவது சாணை பிடித்துக் கொள்வது நல்லது.
இனப்படுகொலை - என்று சொல்வது சட்டப்படி செல்லத்தகாததாகி விடுமாம். இது மேலும் சில மெத்தப்படித்த மேதாவிகளின் மேலான அபிப்பிராயம். மன்னார் மறை மாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் 'ஒன்றரை லட்சம் பேரைக் காணோம், அவர்கள் எங்கே' - என்று ஆதாரத்துடன் கேட்கிறாரே, இதைக் கேட்பது கூட சட்டப்படி செல்லாது என்கிறார்களா? அதைக் கேட்க முடியாது என்றால் இதையாவது கேட்க வேண்டியதுதானே! ஒன்றரை லட்சம் பேர் எங்கே போயிருக்க முடியும்? "அவர்கள் எங்கே என்று சொல், இல்லையேல் அவர்களைக் கொன்றுவிட்டதை ஒப்புக் கொள்" என்று கூட கேட்க மாட்டார்கள் என்றால் இவர்கள் யார்?
இங்கே எங்கள் இந்தியாவிலிருக்கிற தேசியத் தொலைக்காட்சிகளில் ஈழப் பிரச்சினை பற்றிய விவாதமென்றால், அதனுடன் தொடர்பே இல்லாத - சுவாமிகளையோ ராம்களையோ உட்காரவைத்து அழகு பார்க்கிறார்கள். சர்வதேச அரங்குகளில் போய் சுமந்திரன்கள் நிற்பதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களுக்குத்தான் மொழி தெரிகிறது என்று விழிபிதுங்க நியாயம் கற்பிப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன் - 'மொழி தெரிகிற இவர்களுக்கு எம் மக்களின் வலி தெரிகிறதா?'
அலரி மாளிகை வாயிலில் முறைவாசல் செய்யக்கூட கூச்சப்படாதவர்கள், உண்மையை உரைக்கத் தயங்காத அனந்தியிடம் விளக்கம் கேட்டிருப்பதிலிருந்து - எம் இனத்தின் மீது துரோகத்தின் நிழல் இப்போதும் படிந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
"இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணை அவசியம் - என்று தெளிவாகவும் பகிரங்கமாகவும் நேர்மையாகவும் பேசத் தவறுவது எம் இனத்துக்கு இழைக்கும் மாபெரும் வரலாற்றுத் துரோகம்" என்று தெள்ளத் தெளிவான மொழியில் துணிவுடன் விளக்கியிருக்கிறார் அனந்தி. அந்த அளவுக்கு மொழியும் தெரிந்திருக்கிறது, வலியும் தெரிந்திருக்கிறது எங்கள் சகோதரிக்கு!
வாழ்த்துக்கள் அனந்தி! மாதர் தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் - என்றான் மகாகவி பாரதி. நீங்கள் அதை நிரூபித்திருக்கிறீர்கள்! விவஸ்தையேயில்லாமல் விளக்கம் கேட்டவர்களுக்கு, விளக்குமாற்றால் விளக்கியிருக்கிறீர்கள். உங்கள் விளக்கத்தின் மூலம்தான் தலப்பாக்கட்டுகளுக்கு தெளிவும்இல்லை, நேர்மையும் இல்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை சமந்தகர்கள் தலைகீழாக நின்றாலும், இனப்படுகொலையை மூடி மறைக்க முடியாது. அந்த நம்பிக்கையுடன் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் சகோதரி!

No comments:

Post a Comment