May 25, 2014

மோடி பதவி ஏற்புவிழாவிற்குச் செல்லும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் தங்கள் பயணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் : இயக்குநர் கெளதமன் வேண்டுகோள்

உலகம் மறக்கமுடியாத, மறுக்கமுடியாத, மன்னிக்கமுடியாத இனப்படு கொலை செய்த மனித குலப்பகைவன் இராசபட்சே இந்தியா வருவது கண்டிக் கத்தக்கது. முந்தைய
காங்கிரசு தலைமையின அரசு செய்த அதே தவறை பா.ச.க. தலைமையிலான அமையவிருக்கு அரசும் செய்துவிடுமோ என்ற அச்சம் தமிழின உணர்வாளர்களிடையே ஒரு மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இந்தியப் பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் இராச பட்சேவுக்கு அழைப்பு விடுத்திருப்பது, தமிழக மக்களின் மனதில் மீண்டும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமானதாகும்.  எதற்காக காங்கிரசுக் கட்சியை தமிழக மக்கள் புறந்தள்ளினார்களே அதை  ஈரம் காய்வதற்குள் மறந்துவிட்டு வரவிருக்கிறது பாசக. அரசு.

மோடி பதவி ஏற்புவிழாவிற்கு இராசபக்சேவை அழைப்பதை தமிழக முதல் செயலலிதா அவர்கள்  கடுமையாக எதிர்த்தது மட்டுமின்றி தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் செல்வதையும் புறக்கணித்து விட்டார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த், இளையதளபதி விஜய் அவர்களும்  மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள செல்ல இருப்பதாக செய்தி வருகிறது.

தமிழக மக்கள் இத்தனை ஆண்டுகாலம் உங்களை நட்சத்திர நாற்காலியில் அமரவைத்ததற்கு இருக்கிறார்கள். இன்றுவரை தமிழக மக்கள் உங்களை கொண்டாடி வருகிறார்கள் “நீங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு துளி தங்க காசு கொடுத்தது தமிழல்லவா” என்று தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளீர்கள். என்னைப் போன்ற இலட்சக் கணக்கான மக்கள் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறோம். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இராச பட்சே வருகிற சபையில் நீங்களும் அமரப் போகிறீர்களா? குதர்க்கம் விளை விப்பதற்காகவே இராசபட்சே உங்களைப் பார்த்து புன்னகைத்தால் நீங்களும் புன்னகைப் பூக்கப் போகிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்! கொடிய வனோடு கைகுலுக்குவது கொடுமையிலும் கொடுமையானது. இதை விடபடுபாதகச் செயல் வேறென்ன இருக்க முடியும்.

அருள் கூர்ந்து கேட்கிறோம். இந்த விழாவைப் புறக்கணியுங்கள்! தமிழக இன உணர்வாளர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புறக்கணித் துள்ளதை நினைவில் கொண்டு புறக்கணியுங்கள். ஒட்டுமொத்த தமிழினமும் கொந்தளித்து நிற்கிறது. தமிழர்களின் இன உணவுர்க்கு மதிப்பளித்து உங்கள் பயணத்தை ரத்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

No comments:

Post a Comment