May 19, 2014

வடக்கில் இடம்பெற்ற உறவுகளை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு!



எங்கள் சகோதரர்கள் எங்களுக்காக போராடினார்கள், எங்களுக்காக மரணத்தை எய்தினார்கள். எமது எதிர்காலத்திற்காக தமது முழு வாழ்க்கையையுமே அhப்;பணித்தார்கள் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
இன்று இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவரது உரை வருமாறு,
இன்று ஒரு மறக்க முடியாத நாள். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் கூட ஒரு மாபெரும் இன அழிப்பு நடைப்பெற்ற நாள்.
தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளை நினைத்துப்பாhக்க அதற்காக ஒரு துளி கண்ணீர் விட, அதற்காக அஞ்சலி செலுத்த மறுத்திருக்கின்ற அரசின் கீழ் வாழக் கூடிய காலக்கட்டத்தில் நாம் எமது உறவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் அஞ்சலி செலுத்துவதற்காக கூடியிருக்கின்றோம்.
இன்று நீங்கள் பார்த்தீர்களானால் பிதிர்க் கடன் என்று சொல்லும் இந்துக்கள் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பிதிர்கடனைக் கூட செய்யவிடாமல் இன்று கீரிமலைக்கு செல்லும் சகல வீதிகளும் இராணுவத்தால் மூடப்பட்டுள்ளது.
அதே போன்று யாழ்ப்பாணாத்தில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அதே போன்று வீதிகளும் மூடப்பட்டுள்ளன. இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. யாரும் அங்கு போக முடியாது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னர் நூற்றுக்கணக்கான இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு மக்கள் செல்ல முடியாத நிலையுள்ளது.
சாதாரணமாக இருக்கக் கூடிய கோவில்களில் இன்று திருவிழாக்கள் நடக்கக் கூடாதென்று இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மூடப்பட்டு பல்கலைக்கழத்தைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டு கவசவாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே அவ்வாறான மிகவும் மோசமான சூழலில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்று வெற்றிக் களிப்பில் மாத்தறையில் இலங்கை இராணுவமும், ஜனாதிபதியும் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அந்த வெற்றி விழா கொண்டாடுவதற்காக ஒரு வார காலத்திற்கு மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இங்கு கைதுகள் நடைபெறுகின்றன, நாங்கள் ஆலயங்களுக்கோ, தேவாலயங்களுக்கோ சென்று இறந்து போன எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஒருவர், இருவர் அல்ல ஏறத்தாழ இந்த யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை இழந்திருக்கின்றோம். யுத்தத்தின் இறுதி நாட்களில் மட்டும் எழுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா கூறுகின்றது.
இலங்கை இராணுவம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தார்கள் என்பதற்கான பல்வேறுபட்ட சாட்சியங்கள் இருக்கின்றன. இதனை விசாரிக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவெடுத்திருக்கின்றது.
இம்மாத இறுதியில் அல்லது அடுத்தமாத முற்பகுதியில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற இருக்கின்றது.
எமது மக்களை, எமது இனத்தை கொத்து கொத்தாக கொலை செய்தனர். அங்கு பாடசாலைகள், வைத்தியசாலைகள், வணக்க தலங்கள் அழிப்பட்டன. குழந்தைகள் உணவுக்காக வரிசையில் நின்ற போது குண்டுகள் போட்டு அழிக்கப்பட்டார்கள்.
இவையெல்லாம் ஒரு கண்ணியமான யுத்தப் பண்புகளல்ல, என்பது ஒரு சர்வதேச நெறிமுறை. ஆனால் இவையெல்லாம் இலங்கையில் நடந்தது. வன்னியில் நடந்தது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற இருக்கின்றது. இந்த விசாரணையின் முடிவில்தான் எவ்வாறு தீர்ப்புகள் வெளிவரப் போகின்றது என்பது தெரியும். அந்த முடிவுகளின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் எவ்வாறு செயற்படப்போகின்றது?.
இந்த விசாரணைக்காக இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருவதை இலங்கை அரசாங்கம் தடை விதிக்கின்றது. அவர்களுக்கான விசா வழங்குவதற்கு மறுக்கிறது. அவர்கள் இங்கு வராவிட்டால் கூட வெளிநாடுகளில் இருந்து இந்த விசாரணையை நடத்தலாம். இதற்கான விசாரணைகள் என்பது நடைபெறும் என்பதுதான் இன்றுள்ள நிலைமை.
யுத்தத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பல நூறு மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். ஏன் கொலைகளில் ஈடுப்பட்ட இராணுவத்தினால் பல்வேறுபட்ட ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறுப்பட்ட சாட்சியங்கள் இருக்கின்றன.
அந்த அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற இருக்கின்றன. இந்த விசாரணைக்கான முடிவுகளை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுக்கின்ற பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தால் பல்வேறுபட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இதனால் இலங்கை அரசாங்கம் மிகப் பெரிய அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
ஆகவே நாங்கள் பல ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். எமது உறவுகளை அம்மா, அக்கா, தம்பி, பிள்ளையென பல இலட்சம் மக்களை இழந்திருக்கின்றோம்.
எமது மக்களை அழித்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக மகிந்த அரசாங்கம் நினைத்தது.  முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியாதென நினைத்தது.
ஆனால் இன்று புலம்பெயர்ந்து வாழும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகள் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடிய அளவிற்கு. நிலைமையை மாற்றியிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக, நீங்கள் இந்ந மண்ணில் தலைநிமிர்ந்து வாழக் கூடிய எதிர்க்கால்ததை உருவாக்குவதற்காகத்தான் போராளிகள் போராடினார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நாங்கள் சிங்களம் கற்க நிர்ப்பந்திக்கப்பட்டோம், பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்பட்டன, காணிகள் அபகரிக்கப்பட்டன. தற்போதும் கூட தமிழர் தாயகத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலம் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் நீண்ட காலத்திற்கு இப்படி நடக்க முடியாது. இவையெல்லாம் அந்த மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும். இங்கு இருக்கின்ற இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். வெளியேற்றப்படும். அவ்வாறான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். நிச்சயமாக இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேசம் சரியான ஒரு மனோநிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே நாங்கள் தோற்றுப் போய் விட்டோம், அடிமைகளாகி விட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை. நாங்கள் மீண்டும் தலைநிமிர்ந்து இந்த மண்ணில் வாழ வேண்டும்;. நாங்கள் இம்மண்ணின் சொந்தக்காரர்கள். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்திருக்கின்றோம். எமது தமிழ் மொழியென்பது உலக மொழிகளில் மிகவும் பழமை வாய்ந்தது.
ஆகவே இவ்வாறான மிகப் பெரிய வரலாற்று தொன்மை கொண்ட இனம் தமிழ் இனம். இவ்வாறான வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட மண்ணில் வாழ்ந்தவர்கள் நாங்கள். ஆகவே சுதந்திரமாகவும், உரிமையுடனும் வாழ்வதற்கு முழுத் தகுதி பெற்றவர்கள் நாங்கள்.
எங்கள் சகோதரர்கள் எங்களுக்காக போராடினார்கள், எங்களுக்காக மரணத்தை எய்தினார்கள். எமது எதிர்காலத்திற்காக தமது முழு வாழ்க்கையையுமே அர்பணித்தார்கள். அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவதற்கு கூட சிறீலங்கா அரசு அனுமதி மறுக்கிறது. இந்த நிலைமைகள் மாற வேண்டும்.
எம்மால் முடிந்த வரை நாம். அதனை செய்து வருகின்றோம். இந்த மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், யாருக்கும் அடிபணியாமல் வாழக் கூடிய அந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும். என குறிப்பிட்டார்.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மற்றும் இறுதிப் போரில் உறவுகளை இழந்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
போரினால் பாதிக்கப்பட்ட உறவினர்களை இழந்த 150 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களால் வழங்கப்பட்டன.
இறுதியாக மதிய போசன நிகழ்வுடன் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
கிளிநொச்சி அறிவகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு
2009ம் ஆண்டு இதே நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர் இரத்தம், சதை கண்ணீருடன் ஒரு வரலாற்றுப் பயணம், சிங்கள பேரினவாத மமதையாலும் வஞ்ககர்களின் சூழ்ச்சியாலும் மௌனிக்கப்பட்டது.
இன்றுவரை எத்தனை இலட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிய முடியாத அளவில் ஒரு பெரும் மானுட அவலம் அங்கே நிகழ்ந்து முடிந்தது.
இன்று அந்த மானுட அவலத்தால் உலகம் அதிர்வுற்று இருக்கும் வேளையில் எமது உயிரிழந்த மக்களின் நினைவுகளை கூட அஞ்சலிக்க முடியாதபடி சிறிலங்கா அரசாங்கம் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்திவந்த நிலையில், இன்று தாயக மக்கள் தங்கள் உற்ற சொந்தங்களின் நினைவுளை கண்ணீர் மல்க தங்கள் உள்ளங்களில் நினைவு கூர்ந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தீபங்கள் ஏற்றி வணங்கினர்.

No comments:

Post a Comment