May 21, 2014

நியூசிலாந்தில் நடைபெற்ற மே 18 இனவழிப்பு நாள்



நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற வைகாசி பேரவலத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு. வல்லாதிக்க நாடுகளின் சதியுடன் சிங்கள
பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே வைகாசி 18ம் திகதி 2009ம் ஆண்டாகும். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி தமிழீழ மண்ணில் ஒரு இனவழிப்பை சிங்கள பேரினவாதம் அரங்கேற்றியது.
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட வைகாசி 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் ஐந்தாவது ஆண்டில் நிற்கின்றோம்.

வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் 18 திகதி ஞாயிற்றுக்கிழமை Mt Roskill Intermediate School மண்டபத்தில் தமிழினவழிப்பின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

மாலை 6.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடியினை நியுசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லோகி (JAN LOGIE) அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து ஈகைசுடரினை இறுதிபோரில் தனது நான்கு பிள்ளைகளையும் பறிகொடுத்த தாய் சரோஜா நாகராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து , வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் ,இனவழிப்பில் சாவைத் தழுவிய தமிழீழ மக்களிற்குமான மலர், சுடர் வணக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சிப்பூர்வமாக தமிழினவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் உணர்வுப்பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தினர்.

தொடர்ந்து நியுசிலாந்து தமிழர் பேரவை தலைவர் தயாகரன் மற்றும் விஜிகலா அவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து நியுசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லோகி(JAN LOGIE) அவர்களால் சிறப்புரை நிகழ்த்தபட்டது. தொடர்ந்து சிற்றுரைகள் , கவிதைகள் என முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து தமிழீழ இளையோர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்காலின் வலியை எடுத்துக்காட்டும் அத்துடன் இளையோரின் வீர முழக்கத்துடன் கூடிய காணொளியும் காண்பிக்கபட்டது.

இறுதி நிகழ்வாக கொடியிறக்க நிகழ்வு இடம்பெற்றது முடிவில், சகல விதங்களிலும் நிகழ்வுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, இத் தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும்
துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி பூணுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலித்து நிறைவடைய , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு தமிழின அழிப்பின் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் 8 மணியளவில் நிறைவு பெற்றன.



No comments:

Post a Comment