வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா- மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைச் சாவடி அமைந்துள்ள காணிகளில் வசித்தவர்கள் காணி அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் 1997ஆம் ஆண்டு பங்குனி மாதம் அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில், 1964ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் பிரகாரம் பொதுத்தேவைக்கென வடக்கு பக்கம் இறம்பைக்குளம் ஆனந்த நடராசா வித்தியாலயத்தையும், ஏனைய மூன்று திசைகளிலும் தனியார் காணிகளை எல்லையாகவும் கொண்டுள்ள இந்தக் காணிகளை உரிமை கோருவதற்கு எவருமில்லையென தெரிவித்து உள் நுழைவு மற்றும் வெளியகல்வு நிலையத்தை நிறுவுவதற்கு சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் பெப்ரவரி 22ஆம் திகதி இந்தக் காணியின் உரிமையாளர்கள் என கூறி 14 பேர் கையெழுத்திட்டு அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கு தமது காணிகளை விடுவித்து மீள்குடியேற்றுமாறு கோரி கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
எனினும், ஒரு வருடமாகியும் எந்தவித பதிலும் வழங்கப்படாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி பேதமின்றி முன்வந்து தமது காணிகளை மீளப்பெற்றுத் தருவதற்கு உதவுமாறு காணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment