April 10, 2014

நேற்று கட்சிக்கு வந்த குகவரதனுக்கு உண்மை தெரிய வாய்ப்பில்லை - குமரகுருபரன்!


பொய்களைக் கட்டவிழ்த்து விடும் மனோ கணேசன், ராஜேந்திரன் மற்றும் குகவரதனது பெயரில் உண்மையெனும் முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கப்
பார்க்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஜனாநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள கூட்றிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், குமரகுருபரன் இன்று (10) விடுத்துள்ள அறிக்கையில்,
விவாதம் தோற்றுப்போகும்போது தனிமனிதத் தாக்குதல் ஆயுதமாகிறது என்பார் சோக்ரடீஸ். என்மீது குறைகூற காரணங்கள் இல்லாமல் எனது உடல்பருமனைக் குறைகூறுமளவுக்கு இவர்கள் தாழ்ந்துவிட்டார்கள். பதிலுக்கு இவர்களது தனிமனித ஒழுக்கம் பற்றி நான் ஆதாரபூர்வமாகப் பேசுவதற்கு நிறையவே உண்டு, ஆனால் நான் அரசியல் நாகரீகமுள்ளவன், ஆனால் என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை இவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக தேர்தல் முடிவுக்குப் பின்புதான் நான் குற்றம் சுமத்துகிறேன் என்பது முற்றிலும் தவறு. நான் அதற்கு முன்பாகவே என்னுடைய கருத்துக்களை வெளியிட்டுவிட்டேன். குறித்த மின்னல் நிகழ்ச்சியில் நான் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்ட ஒருவரோட கலந்துகொண்டேனாம். ஒரு நிகழ்ச்சியில் யார் கலந்துகொள்வார்கள் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் தான் தீர்மானிக்கிறார்.
அதை நாம் எப்படித் தடுக்க முடியும்? அதே நிகழ்ச்சியில் என்னருகில் அசாத் சாலி இருந்தார், எனக்கு எதிரில் ஜே.வி.பி. யின் சந்திரசேகரன் இருந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பல கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்வதுண்டு, அதை நாம் எப்படித் தடுப்பது? அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மனோ கணேசனும் தான் கலந்துகொள்கிறார்.
மேலும் யாராகவிருந்தாலும் அவர் உண்மையைச் சொல்லும் போது, அதைப் பொய் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர் வாக்குத் தமிழருக்கே என்று அறைகூவல்விடுத்து வாக்குப் பெற்றுவிட்டு பிறகு அதைச் சிங்களப் பெண்மணி ஒருவருக்கு தாரைவார்த்தது தவறு என்று யார் சொன்னாலும், அதைத் தவறு என்று தான் நான் ஒப்புக்கொள்ள முடியும். மனச்சாட்சிக்கு விரோதமான பொய்களை என்னால் கூற முடியாது.
தேர்தல் தோல்விக்குக் காரணம் தேட வேண்டும் எனச் சொல்லும் இவர்கள், அதற்கான காரணத்தை நான் சொல்லும் போது அதை ஏற்கமறுப்பது ஏன்? தனித்துக் கேட்டதை ஒரு மாபெரும் வெற்றியாக இவர்கள் காட்டிக் கொள்வது வெறும் சமாளிப்பு, இது ஒரு மாபெரும் சாணக்கியத் தவறு என்பதே எனது கருத்து – அதுவே உண்மையும் கூட. இதுவரை நான்காக கொழும்பில் இருந்த தமிழர் பிரதிநிதித்துவம், இரண்டாகக் குறைந்துள்ளது, இது நிதர்சனம், இதை நாம் மறுக்க முடியாது.
இந்தத் தவறைச் சுட்டிக் காட்டுவது எவ்வகையில் தவறாகும். நான் கட்சிக் கூட்டத்தில் பேசியதை பகிரங்கமாகச் சொல்லிவிட்டேனாம். கட்சிக்குள் ஒரு கதை, மக்களுக்கு வேறொரு கதை என கதைவிடும் அரசியல் எனக்குத் தெரியாது. கட்சிக்குள்ளோ. வெளியிலோ எனது கருத்து ஒன்று தான். மனோ கணேசன் அல்ல, மகேசனே என்றாலும் நான் உண்மையைத் தான் சொல்வேன். ஒரு அரசியல்வாதி ஊடகங்களுக்கு கருத்துச்சொல்வதற்கு தலைமையின் அனுமதி வேண்ட வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான பாசிஸம் அன்றி வேறென்ன?
என்னுடைய தனிப்பட்ட வெற்றி, தோல்வியை ஆராயவேண்டி மனோ கணேசன் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறார்கள். கோடிகளைக் கொட்டி நடந்த தேர்தலிலே நான் அந்தக் கோடிகளுக்கு முன்னால் பின்னடைந்தது உண்மைதான். பண அரசியலின் முன்பு தோற்றதை நான் தோல்வியாகக் கருதவில்லை.
தேர்தலின் போது இவர்கள் எனக்கெதிராகச் செய்த சதிகளை இவர்கள் அவ்வளவு விரைவில் மறந்துவிட்டார்களா என்ன? மூன்றாவது வாக்கை எனக்களிக்கக் கூடாது என்பதற்காக விருப்பு வாக்குகள் இரண்டுதான், மூன்றாவது அளித்தால் வாக்கு செல்லுபடியாகாது என்ற விசமப் பிராச்சாரத்தை எமது வேட்பாளர்களில் ஒருவரே அப்பாவி வாக்காளர் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டதை மக்கள் அறிவார்கள். பிரியாணி குணரட்ன எனக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எனது ஆதரவாளர்களை மிரட்டியதையும் மனோ கணேசன் நன்கு அறிவார்.
கடைசி நாட்களில் இலக்கம் 5ற்கு வாக்களிக்க வேண்டாம் என தொலைபேசியூடாகவும், குறுந்தகவல் ஊடாகவும் இவர்கள் செய்த பிரச்சாரத்தை இவர்களே மறந்ததுதான் வேடிக்கை. இத்தனை சதிகள் செய்து குமரகுருபரனை வீழ்த்திவிட்டு, குமரகுருபரன் வீழ்ந்துவிட்டான் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். இவர்களது கருத்து முழுவதுமே பதவியைச் சுற்றித்தான் இருக்கிறது.
எனக்கு பதவி ஒரு பொருட்டல்ல. பதவியை வேண்டி நான் அரசியல் செய்தவனும் அல்ல. அப்படி பதவி வேண்டியிருந்தால் 35 வருட அரசியல் வாழ்வில் அதை என்றோ அடைந்திருக்கலாம். பதவியைத் தாண்டிய கொள்கை அரசியல் என்று ஒன்று உண்டு என்பதே இவர்களுக்குத் தெரியாது. பதவி தான் வேண்டும் என்று நான் ஆசை கொண்டிருந்தால் மனோ கணேசனுக்கு ஒத்தூதி அதைத் தக்கவைத்துக்கொண்டிருக்கலாம்.
அதற்கு நான் தயாராக இல்லை. பத்தாண்டாக நான் பதிவியிலிருந்தேனாம், அதற்காகத்தான் பாடுபட்டேனாம். நான் 35 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். 25 ஆண்டுகள் பதவி இல்லாமலே உக்கிரமான அரசியல் செய்தவன் நான். காசு கொடுத்து மாலை போடுவிக்கும் சினிமாத்தனமான அரசியல் எனக்குத் தெரியாது. வணிகம் செய்துவிட்டு பணத்தோடு வந்து தேர்தல் கேட்டு பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல.
2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 34, 000 வாக்குகளைப் பெற்று நான் தோல்வியடைந்ததைக் குறிப்பிடும் இவர்கள் அதே தேர்தலில் மனோ கணேசன் கண்டியில் தோல்வியடைந்ததை ஏன் குறிப்பிட மறந்தார்கள்? தேர்தலில் வெற்றி பெற்றவன் எல்லாம் நல்ல அரசியல் தலைவன் என்று சொல்லவும் முடியாது, தோல்வியடைந்தவன் எல்லாம் நல்ல தலைவன் இல்லை என்று சொல்லவும் முடியாது.
நேற்றைய அறிக்கையில் நான் அரசாங்கத்துடன் போகப்போகிறேன் என்றார்கள். இன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் போகப் போகிறேன் என்கிறார்கள். என்மீது என்ன பழி சொல்வதென்று தெரியாமல் எல்லாமாதிரியும் பேசிப் பேசிப் பார்க்கிறார்கள். இந்த இடத்தில் நான் முக்கியமான ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துதல் அவசியம்.
இன்றைய இவர்களுடைய அறிக்கையில், தேவைப்பட்டால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியோடு தேர்தல் கூட்டணி அமைப்போம் என்கிறார்கள். இதைத் தானே நானும் சொன்னேன். அப்படிச் செய்திருந்தால் இன்று தலைநகரில் நான்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கலாம். நான் ஐக்கிய தேசியக்கட்சியோடு சேர வேண்டும் என்று சொன்னதாக எனது கருத்தைத் திரிபுபடுத்துகிறார்கள். நான் பொது எதிரணி பற்றியே பேசினேன். பொது எதிரணியில் ஐ.தே.க முக்கிய கட்சியாகிறது அவ்வளவே.
அன்று மனோ பாராளுமன்றம் சென்றதும் இதன் ஊடாகவே, நாம் 3 தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டதும் இந்தக் கூட்டணி ஊடாகவே. சாணக்கியத்தனமாக முடிவுகள் பற்றித் தான் நான் பேசினேன். தனித்துவம் என்று சிலாகிக்கும் இவர்கள், அதனால் இரண்டு பிரதிநிதித்துவம் குறைந்திருக்கிறது எனும் உண்மையை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? மாநகரசபைத் தேர்தலைப் பொருத்தவரையில் நாம் தனித்துக் கேட்பதுதான் உசிதமானது.
ஏனெனில் அப்போதுதான் அதிகளவிலான தமிழ் பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மாகாணசபைத் தேர்தலிலோ, பாராளுமன்றத் தேர்தலிலோ அது உசிதமானதல்ல மாறாக பொது எதிரணியாகக் கேட்கும் போது எமது மக்கள் வழங்கும் வாக்கின் உச்ச பலனை நாம் அடைய முடியும், அதாவது அதிகளவிலான பிரதிநிதித்துவத்தை நாம் அடைய முடியும்.
இன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேரப்போவதாகச் சொல்லிட்டு, நாளை இவர்களே அங்கே போய் சரணாகதி அடைவார்கள், அதற்கு பெரும் வியாக்கியானமும் சொல்வார்கள். இந்த சுத்துமாத்து அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் எனது பதவிக்காகப் பேசுகிறேன் என்று அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார்கள். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த பொழுது, யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருமுறை வந்தது, போட்டியிட்டிருந்தால் கட்டாயம் வெற்றிபெற்றிருக்கக் கூடிய சூழலில் முதல் முறை அன்று தலைவராக இருந்த விநாயகமூர்த்தி அவர்களுக்கும், பின்னர் அண்ணன். குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் அவர்களுக்குமாக நான் விட்டுக்கொடுத்தேன்.
அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். சிறப்பான ஒரு வேட்பாளரை நியமிக்க மனோ கணேசன் எனது இடத்தை விட்டுக் கொடுக்கக் கேட்டிருந்தால் தாராளமாக நான் அதைச் செய்திருப்பேன், ஆனால் பணத்திற்காக ஆசனங்களை விற்க முயல்வதை குமரகுருபரன் ஒருபோதும் ஏற்கமாட்டான். என்னை பதவி ஆசை பிடித்தவானக இன்று பதவிக்காக அரசியலுக்கு வந்திருப்பவர்கள் சித்தரிக்க முயல்வது வேடிக்கையானது.
இன்றுவரை இந்தக் கட்சியின் உள் நின்று தவறுகளைத் திருத்தவே முயற்சித்தேன். எடுத்த எடுப்பிலே எடுத்தெறிவது சாணக்கியமான செயல் அல்ல. அதனால் தான் நான் எத்தனை பிரச்சினைகள் வந்தபோதும் கட்சியிலிருந்து விலகவில்லை மாறாக எனது மாற்றுக் கருத்துக்களை உறுதியாக கட்சிக்குள் முன்வைத்தேன். என்று மனோ கணேசன் என்னை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தினாரோ, இதற்குப் பிறகும் நான் கட்சியில் இருப்பதில் அர்த்தமில்லை என்பதாலேயே நான் கட்சியிலிருந்து விலகினேன்.
என்னைப் பற்றி தவறான கருத்துக்களை, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்துக்களை, அப்பட்டமான பொய்களைக் கட்டவிழ்த்து விடும் இவர்கள் யாரென்று மக்களுக்கு அடையாளப்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இவர்கள் என்னைத் தள்ளியிருக்கிறார்கள். என்னிடம் உண்மையுண்டு, அதனால் தான் என்மீது குற்றம் சுமத்த கருத்துகளின்றி எனது உடல்பருமனைப் பற்றியெல்லாம் உளறுகிறார்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக மேல்மாகாண சபையிலிருந்த நான் என்ன செய்தேன் என்று கேட்கிறார்கள்? நான் சபையில் பேசவில்லை என்று பச்சைப் பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இது போன்ற பொய்களைத் தொடர்ந்தும் பரப்புவார்களாயின் நான் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். பேசுவதற்கு முன்பாகவே பேச்சை அறிக்கையாக அனுப்பிவிடும் “பப்ளிசிட்டி” அரசியல் நான் செய்வதில்லை.
நான் சபையில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஹன்சாட் பதிவில் இருக்கிறது, எடுத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். திவிநெகும சட்டமூலத்தை வலுவாக எதிர்த்துப் பேசியவன் நான், ஹன்சாட் பதிவுகள் இதற்குச் சாட்சி. வெட்கமில்லாமல் என்மீது அவதூறு சுமத்தவதற்காகப் பொய்களைக் கட்டவிழ்த்து விடக்கூடாது.
மாவத்தை தமிழ்ப் பாடசாலை, சிங்களப் பாடசாலை ஒன்று உருவாக்கப்படவிருப்பதற்காக மூடப்படவிருந்த போது, அதை சாணக்கியமாகக் கையாண்டு கிருலப்பனையில் புதிதாக தமிழ்ப் பாடசாலை ஒன்றை உருவாக்கிக்காட்டியவன் நான். குமரகுருபரனின் இந்தப் பணியை நான் பாராட்டுகிறேன் என்று மனோ அன்று திறப்புவிழாவில் பேசியதை அவருக்கும், அவரது கட்சியினருக்கும் மீள ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அன்றைக்கு பாடசாலை மூடப்படப் போகிறது என்று அதன் அதிபர் பதறிக்கொண்டு போய் ஒரு தலைவரிடம் சொன்னபோது, “மாணவர்கள் தொகை குறைவென்றால், பாடசாலையை மூடத்தான் செய்வார்கள், நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று சொன்னவர்கள், அதனைக் காப்பாற்றி புதிய தமிழ் பாடசாலையொன்று கொழும்பில் கூட்டிணைத்த என்னைப் பார்த்து என்ன செய்தாய் என்று கேட்பது வெட்கக் கேடானது. மாகாண சபை உறுப்பினராகக் குமரகுருபரன் என்ன செய்தான் என்று கொழும்பு கல்விச் சமூகம் சாட்சி சொல்லும்.
கொழும்பு மாவட்டத்தில் நான் அபிவிருத்தி செய்த பாடசாலைகள் சாட்சி சொல்லும். வாய்க்கு வந்ததையெல்லாம் அறிக்கைகளாக எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. தேசிய அரசியலில் நான் என்ன செய்தேன் என்று மக்களுக்கும், ஏன், மனோ கணேசனுக்கும் கூட தெரியும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலே இந்தக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்தவன் நான். தேசிய அரசியலில் நான் என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும். அரசியல் பதிவுகளைத் தேடிப்பாருங்கள் குமரகுருபரன் என்ன பணி செய்தான் என்று உங்களுக்குப் புரியும்.
பிரியாணி குணரட்ன விடயத்தில் அவர் நல்லவர், வல்லவர் என அறிக்கை விடும் இவர்கள், அடிப்படைக் கேள்வியை மறந்துவிட்டார்கள். தமிழர் வாக்கு தமிழருக்கே என்று சொல்லிவிட்டு, பின்பு அதை மறந்து, பட்டியலிலே அடுத்தடுத்திருந்த தமிழர்களையும், கட்சித் தொண்டர்களையும் தாண்டி பட்டியலில் மிகவும் பின்னடைந்திருந்த பிரியாணி குணரட்னவிற்கு பதவியை வழங்கியது ஏன்? அவர் நீங்கள் சொன்னது போல, நல்லவர். வல்லவர் என்றால் அதை தேர்தலுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே, தமிழர் வாக்கு தமிழருக்கு என்று ஏன் மக்களுக்கு பொய் சொல்ல வேண்டும்?
கொள்கை என்பது அடிக்கடி மாற்றும் சால்வை போன்றதென நீங்கள் நினைக்கலாம், என்னைப் பொருத்தவரை அது அவ்வாறானதொன்றல்ல. பிரியாணி குணரட்ன மனித உரிமைப் போராளி என பெருமை கூறும் இவர்களுக்கு பிரியாணி குணரட்ன தமிழ் வர்த்தகர்களிடம் மாநகரசபையூடாகச் செய்யும் பணிகளுக்கு பணம் கேட்டு மிரட்டும் குற்றச்சாட்டுக்களை மறந்தது ஏன்? இது மனோ கணேசனுக்கும் தெரியும். அதைப் பற்றி விசாரிக்காதது ஏன்? குமரகுருபரனுக்கு வாக்களிக்கவேண்டாம் என பிரியாணி குணரட்ன தேர்தல் பிரச்சாரம் செய்த போது மனோ கணேசன் அதைத் தடுக்காதது ஏன்?
பிரியாணி குணரட்ன மனித உரிமைப் போராட்டங்களின் போது பங்குபற்றினார். லுயிஸ் ஆபர் வருகையின் போது ஆர்ப்பாட்டம் செய்தார் என எக்கச்சக்கப் புகழாரங்கள் சூட்டுபவர்களுக்கு அதன் பின்னாலிருந்த சமாசாராங்கள் தெரியாது. முதலில் அவை பற்றி அறிந்துவந்து விட்டு பிறகு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
தனது தம்பியான பிரபா கணேசனையே கட்சியை விட்டு நீக்கியவர் மனோ என அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார்கள். பாவம், நேற்று கட்சிக்கு வந்த குகவரதனுக்கு உண்மை தெரிய வாய்ப்பில்லை. பிரபா கணேசன் கட்சியிலிருந்த இடைநிறுத்தப்பட்டாரே அன்றி நீக்கப்படவில்லை.
மனோ கணேசனின் நிழலில் அரசியல் செய்கிறேன் என்று கூச்சநாச்சமின்றிச் சொல்கிறார்கள். வாக்குகள் சிதறடைந்ததால் தன்னால் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை, தமிழர் ஒற்றுமைதான் தலைநகரில் எமது பிரதிநிதித்துவத்தைக் காக்க ஒரே வழி என்று மனோ என்னிடம் கூறி ஆதரவு கேட்டதை, இன்று நன்றி கெட்டுப்போய் மனோ கணேசன் மறந்திருக்கலாம், ஆனால் வரலாறு அதை மறக்காது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு கையெழுத்திட்ட நால்வரில் ஒருவன் நான். 2001ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் எனது தார்மீக ரீதியான ஆதரவை மனோவுக்கு வழங்கியிருந்தேன். இதெல்லாம் குகவரதனுக்கோ, ராஜேந்திரனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் மனோ கணேசன் இதை எப்படி மறந்தார்? மனோ கணேசனை வளர்த்துவிட்டவன் நான் என்பது வரலாற்று உண்மை. நான் 35 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு மனோ கணேசனின் நிழலில் அரசியல் செய்ய வேண்டிய எந்தத் தேவையுமில்லை.
இன்றைக்கு எனக்கு எதிராக அறிக்கை விடும் குகவரதன், யுத்தகாலத்தில் எங்கிருந்தார்? யாருடனிருந்தார்? என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை அவர் நினைத்துப் பார்த்துக்கொள்வது நல்லது. என்னைப் பற்றிப் பேச இவர்கள் எவருக்கும் எந்தத் தகுதியும் இல்லை. குமரகுருபரனுக்கு நீங்கள் அரசியல் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை.
முள்ளிவாய்க்காலுக்கு நியாயந்தேட மேல்மாகாண சபைக்கு எங்களை தேர்ந்தெடுங்கள் என மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு அர்த்தமற்ற அறிக்கை விட்ட நீங்கள், முதலிலே அரசியலையும், அரசியல் வரலாற்றையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தேர்தலுக்காக தமிழ்த் தேசியம் பேசுபவர், நான் உணர்வுடன் தமிழ்த் தேசியம் பேசுபவன், அந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.
இன்று மனோ கணேசனுடன் இருப்பவர்கள் பலரே என்னைத் தொடர்புகொண்டு, நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையைச் சொல்லவும் ஒருவர் தேவைதானே என்று சொல்கிறார்கள். எங்களால் இயலாததை நீங்கள் சொல்கிறீர்கள் என்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.
இன்று, குமரகுருபரனுக்கு என்ன நடக்கப்போகிறது பார் என எனது ஆதரவாளரை மிரட்டியிருக்கிறீர்கள். உங்கள் மிரட்டல்களுக்கு நான் பயந்தவன் அல்ல. ஆனால் இது பற்றியும் மக்கள் அறிந்திருப்பது நல்லது. நீங்கள் எதுவும் செய்யக்கூடியவர்கள் என்று எனக்குத் தெரியும் ஆனால் மிரட்டி என்னை அமைதியடையச்செய்ய முடியாது.

No comments:

Post a Comment