மன்னார் கொண்ணையன் குடியிருப்பு கிராம மாணவர்கள், பெற்றோர் அரச போக்குவரத்துச் சேவைகள் உரிய முறையில் இடம் பெறுவதில்லை என கூறி
வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.மன்னார் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்ணையன் குடியிருப்பு கிராமத்திற்கான அரச போக்குவரத்துச் சேவைகள் உரிய முறையில் இடம் பெறுவதில்லை என கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,பெற்றோர்களும் இணைந்து இன்று(24) காலை முதல் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கிராமத்தில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்துச் சேவையில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது.இந்த நிலையில் தற்போது குறித்த கிராமத்தில் தரம் 1 தொடக்கம் உயர் தரம் வரை சுமார் 35 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இவர்கள் சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தாராபுரம் கிராமத்தில் உள்ள பாடசாலையிலே கல்வி கற்று வருகின்றனர்.-மனனார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து குறித்த அரச பேரூந்து காலை 6 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்து தாழ்வுபாடு கிராத்தினுடாக தாராபுரத்திற்குச் சென்று அங்கிருந்து எமது கிராமமான கொண்ணையன் குடியிறுப்பு கிராமத்திற்கு வர வேண்டும்.
-அங்கிருந்து பயணிகளையும் குறிப்பாக 35 பாடசாலை மாணவ மாணவிகளையும் ஏற்றிக்கொண்டு தாராபுரம் சென்று பாடசாலை மாணவர்களை இறக்கி விட்டு தாழ்வுபாடு ஊடாக மன்னார் சாலைக்குச் செல்வது வழமை.
ஆனால் குறித்த கிராமத்திற்கு அரச போக்குவரத்துச் வேவை உரிய முறையில் இடம் பெறுவதில்லை எனவும் இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் பிரதேசச் செயலாளர், அரச போக்குவரத்துச் சேவையின மன்னார் சாலை முகாமையாளர்கள் ஆகியோருக்கு பல தடவை எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்ஸிற்காக காத்திருப்பதோடு பின் வீடு திரும்புகின்றனர்.பல மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.சில மாணவர்கள் பாடசாலை வரை நடந்து செல்லுகின்றனர்.
இந்த நிலையிலே குறித்த கிராமத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அரச போக்குவரத்துச் சேவையின் சீரின்மையினை கண்டித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,பெற்றோர்களும் இணைந்து குறித்த பஸ்ஸினை இன்று (24) காலை 7 மணியளவில் அக்கிராமத்தில் இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் எந்த உரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை.
இந்த நிலையில் மன்னார் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் காவல்துறையினர் கொண்ணையன் குடியிறுப்பு கிராமத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர். எனினும் உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இனி போக்குவரத்துச் சேவையில் எவ்வித தடங்களும் ஏற்படாது என வாக்குறுதி வழங்கினால் மாத்திரமே இவ்விடத்தை விட்டு செல்வோம் என அந்த மக்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த மக்களை கடுமையாக அச்சுருத்தியதோடு பெண்களோடு தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
பின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தகவழ் வழங்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் இராசேந்திரம் பற்றிக் வினோ சம்பவ இடத்திற்குச் சென்று அந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக காலை 11.30 மணியளவில் அந்த மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையினை கைவிட்டனர்.பின் குறித்த பேரூந்து காவல் பாதுகாப்புடன் அவ்விடத்தில் இருந்து மன்னார் நோக்கி சென்றது.எனினும் 35 மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment