படை தேவைக்காக காணிகளை வளைத்துப்போடும் வவுனியா மன்னார் மாவட்டங்களின் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தரை சிவசக்தி ஆனந்தன் எம்பி கண்டிக்கின்றார்.
வவுனியா பிரதேசசெயலகப்பிரிவின் மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள இறம்பைக்குளம் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகள் அரச அதிகாரிகளின் உதவியோடு படை தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டிக்கின்றார்.
அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது,
இறம்பைக்குளம் கிராமத்தில் 1997ம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த தமிழ் மக்கள், 1997இல் இருந்து உக்கிரமடைந்த கொடிய போரினால் அக்கிராமம் யுத்த சூனிய பிரதேசமாக விளங்கியதால் அங்கிருந்து வெளியேறி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் முழுமை பெற்றுள்ள நிலையில் வன்னி மாவட்டத்தின் வேறு பல பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், இறம்பைக்குளம் கிராமத்துக்கான மீள்குடியேற்றம் இதுவரையில் அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறித்த கிராமத்துக்கான மீள்குடியேற்றம் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டே வந்தது.
தாம் தமது சொந்த ஊருக்குத்திரும்பி பூர்வீக நிலங்களில் குடியிருந்தும், விவசாய செய்கைகளில் ஈடுபட்டும் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வதற்கு இசைவாக தம்மை தமது நிலத்தில் மீளக்குடியேற்றுமாறு இறம்பைக்குளம் கிராம மக்கள் பலமுறை அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இறம்பைக்குளம் கிராமத்தில் 16 குடும்பங்களுக்கு உரித்துடைய இருபது ஏக்கர் நிலத்தை இராணுவ பயன்பாட்டுக்கு கையகப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
இராணுவ தேவைக்கு சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு உரித்துடையவர்கள் பரம்பரை வழித்தோன்றலாக தொடரும் தமக்கும், தம் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அவர்களிடம் இருந்த ஒரே ஒரு பாரம்பரிய சொத்து அந்த நிலங்கள் மட்டுமே. குறித்த காணி சுவீகரிப்பால் பரம்பரை வழித்தோன்றலாக தொடரப்போகும் சந்ததிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் காணி சுவீகரிப்பு நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புடைய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் இனத்தின் இருப்பையே நிர்மூலமாக்கும் மிகவும் அபாயகரமான இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். பூர்வீக நிலங்களை உரித்துடையவர்களிடம் மீளவும் கையளித்து இயல்பு வாழ்க்கைக்கு வழி விடுமாறும் வலியுறுத்துகின்றேன்.
1953ம் ஆண்டு அரசால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு குறித்த காணிகளுக்கு பகிரங்கமாகவே உரிமை கோருபவர்கள் உயிருடன் இருக்கின்ற போதிலும், வவுனியா மன்னார் மாவட்டங்களின் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் “காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் இனங்காணப்படவில்லை” என்று பொய்யான தகவலை வழங்கி குறித்த காணிகளை சுவீகரிக்க பரிந்துரை வழங்கியுள்ளார். இச்செயல் அவர் தமிழினத்துக்கு செய்த மாபெரும் துரோகமாகும். இவரால், இவரது பரிந்துரைகள் சிபாரிசுகளால் வவுனியா மன்னார் மாவட்டங்களில் பல தமிழ் குடும்பங்களின் உரித்துடைய காணிகள் பறிக்கப்பட்டு அக்குடும்பங்கள் வசிப்பதற்கு இடமின்றி தெருவுக்கு வந்துள்ளன.
எம்மை நாதியற்றவர்களாக்கும் அரச நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகும் ந.திருஞானசம்பந்தர் போன்ற மனிதகுல இருப்புக்கு விரோதமானவர்கள் தொடர்பில் தமிழ் மக்களையும், தமிழ் தேசிய உணர்வாளர்களையும் விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
காணி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய வவுனியா நகரப்பகுதியில் பொதுப்பயன்பாட்டுக்குரிய பல காணிகளும், தனியாருக்கு உரித்துடைய பல காணிகளும் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
பல குடும்பங்களின் இருப்பை மட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறையாக தொடரப்போகும் சந்ததிகளின் கூட்டு இருப்பையே சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கும் இத்தகைய காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். நிலம் எமது வாழ்வுரிமையாகும். அதை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக கையளிக்கும் பெரும் பொறுப்பும், பணியும் நம்மிடம் இருக்கின்றது.
ஆகையால் எமது வாழ்வுரிமையை பறிக்கும் அரச அதிகார பலத்துக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச நாடுகளும் மிகப்பலமாக குரல் கொடுக்க வேண்டும் எனவும், காரசாரமாக எதிர்வினையாற்ற வேண்டுமெனவும் அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment