April 23, 2014

சிறுநீரக விற்பனைக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 21 இந்திய இளைஞர்கள்!

சிறுநீரக விற்பனையின் நிமித்தம் 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர் என ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளனர். மாரு என்ற இளைஞரை தொழில்வாய்ப்புக்காக எனக் கூறி இலங்கைக்கு அழைத்துசென்று அங்கு சிறுநீகரத்தை அகற்றும் போது அவர் உயிரிழந்தார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை பொலிஸார் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் மாருவுடன் சிறுநீரக விற்பனை தொடர்பில் மின்னஞ்சலில் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கடந்த சில மாதங்களில் மாத்திரம் தம்மால் 21 பேர் இவ்வாறு இலங்கைக்குச் சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எம்.பி.ஏ மாணவராவார். இந்த மூவரும் இலங்கையில் உள்ள மருத்துவர் ஒருவருடன் தொடர்பை கொண்டிருந்தனர். சிறுநீரக விற்பனையின்போது இந்த மூவருக்கும் அதிக தரகுப்பணம் கிடைத்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது.செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ் என்பவர் ஏற்கனவே இலங்கைக்கு சென்று சிறுநீரகத்தை விற்பனை செய்தப்பின்னர் இந்தியாவுக்கு திரும்பியிருந்தார். அவரே இலங்கை மருத்துவருடன் இணைந்து இந்தியாவில் உள்ளவர்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகளை ஆரம்பித்தார்.
இந்த விற்பனையின் போது ஒரு சிறுநீரகத்துக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபா வரை கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சிறுநீரகத்தை தானம் செய்பவருக்கு 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. 

No comments:

Post a Comment