April 20, 2014

யாழ். ஊடகவியலாளர் தாக்கப்பட்டதற்கு அனைத்துலக மக்களவை தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது சர்வதேசம் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.
அண்மையில் தமிழ் ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் அவர்கள் கடந்;த 14.04.2014 இரவு யாழ். வடமராட்சி புராப்பொறுக்கி பகுதியில் வைத்து முகமூடித் தலைக்கவசமணிந்த இனந்தெரியாத இரு காடையர்களால் கொலைசெய்யும் நோக்கில் இரும்புக் கம்பிகள் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் உயிர்பிழைத்துள்ளார்.
 
சுதந்திரமான சமூக சேவையில் ஈடுபட்டுவந்த யாழ். ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் இனந்தெரியாதோர் ஊடாக கடுமையாகத் தாக்கப்பட்டதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
 
வீரகேசரி, தினக்குரல் மற்றும் வலம்புரி ஆகிய செய்தித் தாள்களின் யாழ். வடமராட்சிப் பகுதிக்கான ஊடகவியலாளராக செல்வதீபன் பணியாற்றிவந்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் ஓர் உறுப்பினரான அவர் இனந்தெரியாதோரால் தனக்கு இருந்துவந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் ஏற்கெனவே அந்த ஊடக அமையத்துக்கு தெரிவித்திருந்ததுடன், தனது சக ஊடகவியலாளர்களிடமும் இது குறித்து கூறிவந்துள்ளார்.

அண்மையில் நெல்லியடியைச் சேர்ந்த சிறிலங்கா காவல் நிலையத்திலிருந்து தனது தனிப்பட்ட தகவல்கள் கேட்டுப் பெறப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்கியோர் சில மைல்கள் தூரம் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு பின்தொடரப்பட்டவர்களால் செல்வதீபனை நன்றாக அடையாளம் கண்டபின்னரே தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், தனது தாயாருடன் சென்று காணாமற்போன தனது சகோதரர் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அண்மையில் சாட்சியம் அளித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில், மிக இறுக்கமான பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த பகுதியில் வைத்து ஒரு தமிழ் ஊடகவியலாளர் அவ்வாறு கடுமையாகத் தாக்கப் பட்டிருப்பதானது அரச படைகளின் பின்னணியே தவிர வேறு எந்த சக்திகளும் காரணமாக இருக்கமுடியாது.

அதேவேளை, ஏற்கெனவே மன்னாரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பிராந்திய செய்தித்தாளான புதியவன் ஆசிரிய பீடத்துக்கு அரச தரப்புக்களால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல், வன்னி உட்பட பரவலாக பகுதிச் செய்தியாளர்கள் அரச தரப்புகளால் அச்சுறுத்தப்படுகின்றமை மற்றும் அண்மையில் இலங்கைக்கான பி.பி.சி. ஊடகவியலாளர் தொடர்ந்து பணியாற்றுவதற்கு 'விசா' நீட்டிக்காது வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டமை ஆகிய விடயங்கள், இலங்கையில் ஊடக அடக்குமுறையின் உச்சத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

எந்தவித அழுத்தங்களுக்கும் சிறிலங்கா அரசு செவிசாய்க்காது, தொடர்ச்சியாக தமிழ் ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்படுவற்கு எதிராக சர்வதேச சமூகம் தலையிட்டு தொடர்ச்சியான இனவழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளை தமிழர்கள் வேண்டிநிற்கிறார்கள். 

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)
கனடியத் தமிழர் தேசிய அவை
நோர்வே ஈழத்தமிழர்  அவை                                                     
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்                                                            
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு                                                     
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை                                                     
நெதர்லாண்ட் ஈழத்தமிழர் பேரவை                                                          
சுவிஸ் ஈழத்தமிழரவை                                                                     
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை                                            
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை
மொரிஷியஸ் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பு

No comments:

Post a Comment